நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் 2024-ம் ஆண்டின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் முக்கியத்துவம் பெறும். அதுபோல ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருப்பதும் கவனிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திருச்சி வருகைக்கு பின்னே ஒளிந்திருக்கும் ‘அரசியல்’ முக்கியத்துவம் குறித்து அலசினோம்.
2024 ஜனவரி 2-ம் தேதி திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதோடு, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார். வெள்ள பாதிப்பு, விஜயகாந்த் மறைவு, இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் பேசினார். குறிப்பாக `கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு நம் மத்திய அரசு வழங்கி உள்ளது’ என்பதை அழுத்தமாக பேசினார்.

நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர், “மத்திய அரசு நிவாரண நிதி தராமல் வஞ்சிக்கிறது என தி.மு.க தொடர்ந்து பேசிவரும் சூழலில் தமிழகத்துக்கு இத்தனை கோடி கொடுத்துள்ளோம் என்ற பிரதமரின் பேச்சு யதார்த்தமானதல்ல என்றும் மோடியின் தமிழ்நாட்டு வருகைக்கு பின் பல்வேறு அரசியல் சந்திப்புகளும் தேர்தல் கணக்குகளும் இருக்கக்கூடும். அதோடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் என அரசியல் சந்திப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன” என்றனர்.
தமிழ்நாட்டு அரசியலில் அ.தி.மு.க-வுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு கலையிழந்து காணப்படுவதோடு நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு என்னவென்பதே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தமிழ்நாடு பா.ஜ.க. இந்நிலையில் திருச்சி வந்திருக்கும் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகள். அதில் தமிழ்நாடு பா.ஜ.க-வின் தேர்தல் பிளான், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதெல்லாம் தமிழ்நாட்டு நிர்வாகிகள் எடுத்துரைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு நிர்வாகிகள். பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடந்தியுள்ள நிலையில் தேர்தலில் தமிழ்நாடு பா.ஜ.க என்ன செய்யப்போகிறதென்ற திட்டங்கள் மிக விரைவிலேயே அறிவிப்பாக வெளியாகலாம் என்ற தகவல்களும் கசிகின்றன.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகையை எளிதாக கடந்துவிட முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்பிருந்த பா.ம.க, தா.ம.க, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களும் தனியாக நிற்கும் தே.மு.தி.க, பன்னீர், டிடிவி உள்ளிட்டவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது பா.ஜ.க-வின் முடிவை பொறுத்ததே அமையும்.
அந்தவகையில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியில் இதுவரை சேராதவர்களை மொத்தமாக பா.ஜ.க ஒருங்கிணைக்குமேயானால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்துக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டு “ என்கிறார்கள்.

நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நோக்கத்தில் மட்டும் தமிழ்நாடு வந்திருக்க மாட்டார். அதில் பல்வேறு அரசியல் கணக்கீடுகளும் கண்டிப்பாக இருக்கும். பிரதமர் மோடி என்ன மாதிரியான அரசியல் தந்திரங்களை கையாண்டாலும் சரி, யாரை சந்தித்து பேசினாலும் சரி, அவை எதுவுமே தமிழ்நாடு மண்ணில் அணுவை கூட அசைக்காது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, எந்த தேர்தலில் பா.ஜ.க-வை ஒரு பொருட்டாகவே தமிழ்நாட்டு மக்கள் மதிக்கப்போவதில்லை.
குறிப்பாக சென்னை மற்றும் தென்மாவட்ட மழை குறித்து பேசிய நிர்மலா சீதாராமன் ‘தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது’ என ஆணவ மொழியில் பேசுகிறார். மழைவெள்ளம் நிகழ்ந்து ஒருமாதமாகிறது. இன்றுவரை தமிழ்நாடு அரசு கேட்ட அவசரகால பேரிடர் நிவாரண நிதியை தர மறுக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. தமிழகத்தின் ஆபத்து காலங்களில் குரல் கொடுக்காத, இழப்புகளை கண்டுகொள்ளாத பா.ஜ.க-வை மக்கள் உறுதியாக புறக்கணிப்பார்கள். அதனை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றார் காட்டமாக…
நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் ஐடி விங் துணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார், “பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் 40 முறையாவது தமிழ்நாடு வந்திருப்பார். என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது? தேர்தல் பிரசாரத்துக்கு நேரடியாகவே வந்த பிரதமர் மோடியால் என்ன தாக்கத்தை கடந்த காலங்களில் ஏற்படுத்த முடிந்தது? பிரதமர் மோடியை அரசியல் கட்சியினரை சந்திப்பதாக சொல்கிறீர்கள். அதிலும் பயனில்லை.
தமிழக அரசியலின் செல்லா காசுகளை சந்திப்பதில் எதாவது பயன் இருக்கப் போகிறதா? குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் கட்சியும் இல்லை, வாக்குவங்கியும் இல்லை, அவர் சந்தித்து ஒரு பிரயோஜனமும் கிடையாது” என்றார் காட்டமாக

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வினரோ, “பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருப்பது தமிழக மக்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசும்போது கூட மோடி மோடி என சாமானியர்கள் ஆர்பரித்ததிலிருந்து தமிழ்நாட்டில் மோடியின் பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இதோடு நிற்க போவதில்லை, 2024 நாடாளுமன்ற தேர்தல் களத்திலும் பா.ஜ.க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொறுத்திருந்து பாருங்கள்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
