இந்த நிலையில் சபரிமலை பதினெட்டாம் படி மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மேற்கூரை அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள கல் தூண்களால்தான் அதிக அளவு பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பதினெட்டாம் படியை ஒட்டி இப்போது கல் தூண் அமைக்கப்பட்டுள்ள இடத்தில்தான் போலீஸார் நின்றுகொண்டு பக்தர்களை பதினெட்டாம் படியில் ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால், மேற்கூரை பணிக்காக கல் துண்கள் அமைக்கப்பட்டதால் பக்தர்களை ஏற்றிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போன்று நிமிடத்துக்கு 750 பக்தர்களை ஏற்றிவிட முடியாத நிலை உள்ளதாகவும், நிமிடத்துக்கு சுமார் 450 பக்தர்களையே பதினெட்டாம் படியில் ஏற்றிவிட முடிவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. மொத்தத்தில் சபரிமலையில் நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காரணம் பதினெட்டாம் படிக்கு முன்பு உள்ள கல் தூண்கள்தான் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலையில் ஐயப்பசுவாமி கோயிலில் பதினெட்டாம் படியில் ஏறிச்செல்வது புனித நிகழ்வாக கருதப்படுகிறது. பதினெட்டாம் படியில் விளக்கு ஏற்றி அவ்வப்போது படி பூஜைகள் செய்யப்படுவதும் வழக்கம். மழைக்காலத்தில் படிபூஜைக்கு தடை ஏற்பட்டு வந்தது. மேலும் மழைகாலத்தில் படிபூஜை நடத்துவதற்காக தார்ப்பாய் கட்டப்பட்டும் வந்தன. இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுத்தும் விதமாகவும். ஐம்பொன்னால் ஆன பதினெட்டாம் படியை பாதுகாக்கும் விதமாகவும் ஹைட்ராலிக் மேற்கூரை அமைக்க தேவசம்போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதற்கு ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நன்கொடை வழங்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் பங்களிப்புடன் மேற்கூரை அமைக்க கல் தூண்கள் அமைகப்பட்டுள்ளன. மேற்கூரை பணிகள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளன. இதற்கிடையே பதினெட்டாம் படியின் அழகையும், புனிதத்தையும் கெடுப்பதாக கூறி கல் தூண்கள் அமைத்ததற்கு எதிராக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கல் தூண்களால் சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரிகளும் அரசிடம் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
