போயஸ் கார்டன்… இந்த பெயரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல… இந்திய அரசியலைக்கூட முழுமையாக எழுதிவிடமுடியாது. திமுக-வினருக்கு கோபாலப்புரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி வீடுபோல, அதிமுக-வினருக்கு கோயில் ‘போயஸ் கார்டன் வேதா இல்லம்தான்.

ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் அங்கு குடியிருந்தாலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அங்கு இருப்பதாலேயே போயஸ் கார்டன் பட்டிதொட்டிகெங்கும் பேசப்பட்டது. அந்த வேதா இல்லத்தில் ஜெயலலிதாவுடன் சுமார் 30 ஆண்டுகள் தங்கிருந்த சசிகலா, அவர் மறைவுக்குப்பின் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது, கடைசியாக போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினார்.
இதன்பின்னர் அ.தி.மு.க-வின் அதிகாரமிக்க இடத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலாவை முற்றிலுமாக கட்சியில் இருந்து அப்புறப்படுத்தியது.
அதேபோல, சிறையில் இருந்து வெளியே வந்தாலும், சசிகலாவின் கைகளுக்கு வேதா இல்லம் போய்விடக்கூடாது என்பதற்காக, அதை அரசுடமையாக்கியது அப்போதைய அதிமுக அரசு. தண்டனை காலம் முடிந்தப்பின்னர் வெளியே வந்த சசிகலா, போயஸ் கார்டனுக்கு செல்ல முடியாத நிலையில் தி.நகரில் அபிபுல்லா சாலையில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்தார். இதற்கிடையே நீதிமன்றம் வாயிலாக, வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும் தீபக்கும் பெற்றனர். தற்போது அவர்கள்தான் அங்கு வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான் பல ஆண்டுகள் கழித்து போயஸ் கார்டனுக்கு சென்றார் சசிகலா. ஆனால், இந்தமுறை அங்கு சசிகலா சென்றது தான் புதிதாக கட்டியிருக்கும் தனது சொந்த வீட்டுக்கு. வேதா இல்லத்தின் எதிரே இரண்டு மாடி கொண்ட பிரமாண்ட மாளிகையை கட்டிமுடித்து, அங்கு கிரகப்பிரவேசம் செய்து குடியேறியிருக்கிறார் சசிகலா.
இதுதொடர்பாக சசிகலாவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “அம்மா மறைவுக்கு பிறகு சின்னம்மா சசிகலாவால் வேதா இல்லத்துக்கு செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. வேதா இல்லம் அரசு உடைமையாக்கப்பட்டபோது, சிறையில் இருந்த அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாவுக்கு பிறகு அது தனக்கானது என்று நம்பிக்கொண்டு இருந்த சின்னம்மாவுக்கு அந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்தது.
இதை தடுத்து நிறுத்த தினகரன் உள்ளிட்ட அவரின் உறவினர்கள் மூலமாக முயன்றார். ஆனால், தினகரன் உள்ளிட்ட யாருமே வேதா இல்லத்தை கைபற்றும் அளவுக்கு சசிகலாவுக்கு உதவவில்லை. இனி வேதா இல்லத்துக்கு செல்லவே முடியாது என்ற நிலையில்தான், சிறையில் இருக்கும்போதே போயஸ் கார்டனிலே புதிய வீடு கட்ட முடிவு செய்தார் சசிகலா. அதன்படிதான், வேதா இல்லத்துக்கான கார் பார்க்கிங்குக்காக பயன்படுத்தப்படும் தனது பெயரில் உள்ள இடத்தில் வீடு கட்ட முடிவானது. 2020 வாக்கில் அவர் சிறையில் இருக்கும்போதே பூமி பூஜையும் போடப்பட்டது.

முன்னர், வேதா இல்லத்தில் சில மாறுதல்களை செய்யவேண்டுமென்று அம்மா விரும்பியிருக்கிறார். அப்படி, அவர் விரும்பிய வடிவில்தான் இந்த புதிய இல்லம் கட்டப்பட்டது. வீடு எப்படி இருக்கவேண்டுமென்று டிசைன்களையும் சசிகலாதான் தேர்வு செய்தார். இரண்டு மாடி வீட்டில், வேதா இல்லத்தைபோலவே பால்கனி அமைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் ஹால், மீட்டிங் ஹால், அலுவலகம் என வேதா இல்லம்போலவே உருவாக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்தபோது, வீட்டில் பணிகளை பார்வையிட அவரின் உறவினர்கள் அழைப்பு கொடுத்தபோதுக்கூட, ‘ அம்மாவோடு போயஸில் இருந்தவள் நான். அம்மாவே ‘இது உன் வீடு’ என்றுதான் சொல்லுவார். அப்படிப்பட்ட நான், சொந்த வீடு இல்லாமல் போயஸுக்கு வர மாட்டேன் என்று சிறையில் இருக்கும்போது முடிவு செய்தேன். புதிய வீடு கட்டும் பணி நிறைவடைந்து கிரகப்பிரவேசத்துக்குதான் இனி போயஸுக்கு வருவேன்’ என்று உறுதியாக இருந்தார். அதன்படி, 24-ம் தேதி கிரகப்பிரவேசம் நடந்திருக்கிறது. அம்மாவை போல சின்னம்மாவும் போயஸ் கார்டனில் இருந்து அரசியல் செய்வார்” என்றனர் விரிவாக.
“அம்மா-வால்தான் போயஸ் கார்டன் அரசியலின் மையப்புள்ளியாக இருந்ததே தவிர, போயஸ் கார்டனால் அம்மா இல்லை.” என்கிறது அதிமுக தரப்பு.

தொடர்ந்து பேசியவர்கள் “தற்போது போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் தீபாதான் இருக்கிறார். ஆனால், தீபா-வால் அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. தற்போது போயஸ் கார்டனில் இருந்து அம்மாவை போல அரசியல் செய்யலாம் என்று புதுவீடு கட்டி கிளம்பி இருக்கிறார் சசிகலா. அம்மாவின் அரசியல் அவர் இருந்த வீட்டிலோ போயஸ் கார்டனிலோ இல்லை.
அம்மாவின் துணிச்சல், திறமைதான் அவரின் அரசியலுக்கே அஸ்திவாரம். போயஸ் கார்டனில் குடியேறினால் அம்மாவாக ஆகிவிடமுடியாது. அம்மா இருந்த இடத்தில் இருந்து அரசியல் செய்யவேண்டும் என்பது சசிகலாவின் பலநாள் பகல் கனவு. அதை இதுபோன்று புது வீடு கட்டி நிறைவேற்ற பார்க்கிறார். அவ்வளவுதான்” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
