சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற பா.ம.க நிறுவனத் தலைவர், மருத்துவர் ராமதாஸ் அந்தக் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியுடன், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடனிருந்தனர். “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டுக்கால கோரிக்கை. இந்தியாவில் பீகாரில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

நீங்களும் நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தீர்கள். இதை பா.ம.க-வும் ஆதரிக்கிறது. ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் பல்வேறு மேடைகளில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராகப் பேசி வருவதால், இப்போதைக்கு மத்திய அரசு அதற்கான முன்னெடுப்பைச் செய்யாது எனத் தெளிவாகிறது. எனவே, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால், 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது. எனவே தமிழ்நாடு அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்” எனக் கடிதம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அந்தக் கோரிக்கைகளை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராமதாஸே நேரில் வந்து இப்படியான கடிதத்தைக் கொடுத்தது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்துப் பேசுவதற்கும் மட்டும்தானா… அல்லது வேறெதும் நோக்கம் இருக்குமா என்ற கேள்வியோடு அறிவாலயத்தை வலம் வந்தோம்…
“மருத்துவர் ராமதாஸ் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்துவிட மாட்டார். அதுவும் அவரே நேரில் வந்து கோரிக்கை வைக்கிறார் என்றால், அதில் அரசியல் உள்நோக்கம் இல்லை எனச் சொல்லிவிட முடியாது” எனத் தொடங்கினார் சீனியர் அமைச்சர் ஒருவர்… “இந்தச் சந்திப்பின் ஒட்டுமொத்த நோக்கமும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டியதுதான். இதன் பின்னணியில் இரண்டு விஷயங்கள் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஒன்று, தி.மு.க கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது… மற்றொன்று அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்டக் கட்சிகளுக்கு `எங்களுக்கு வேறொரு வாய்ப்பு இருக்கிறது’ என்பதை உணர்த்துவது. இது எங்களுக்கும் தெரியாமல் இல்லை. ஆனால், இந்தச் சந்திப்பு நிகழாமல் இருந்திருந்தால் ‘வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்துப் பேச நாங்கள் மூன்று முறை முதல்வரிடம் நேரம் கேட்டோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார்’ என எங்களை வன்னியர்களுக்கு எதிராக நிறுத்தும் வேலையைச் செய்திருப்பார்கள்.

அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதாலும், இட ஒதுக்கீடு குறித்து உண்மையிலேயே அரசும் அக்கறை கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவுமே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால்தான் ராமதாஸ் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களுடன் இந்தச் சந்திப்பு நிகழ்த்தப்பட்டது” என்றார்.
அவரிடம், “இந்தச் சந்திப்பு வி.சி.க உள்ளிட்ட கட்சிகளிடம் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்க வாய்ப்பை உருவாக்கிவிடாதா?” என்ற கேள்வியை முன்வைக்க, “தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நிகழ்வுகளின் பின்னணியை வி.சி.க-வினரும் புரிந்துகொள்வார்கள். அந்தத் தெளிவு எங்களுக்குள் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பா.ம.க-வுடன் கூட்டணி அமைப்பது அரசியல்ரீதியில் எங்களுக்கும் பெரிய பின்னடைவாகவே அமையும் என்பதை, நாங்களும் உணர்ந்திருக்கிறோம். அவர்களின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.” என்றவர்…

“எங்கள் நோக்கம் யார் கோரிக்கையோடு வந்தாலும் அதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்பதுதான். அப்படி நிகழ்ந்ததுதான் இந்தச் சந்திப்பு” என ராமதாஸ் – முதல்வர் சந்திப்பின் பின்னணியைப் பகிர்ந்துகொண்டார்.
நன்றி
Publisher: www.vikatan.com
