“திமுக அரசு, சமூகநீதியை நிலைநாட்ட பயப்படுகிறது!" –

“தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்” என்று பேசியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

கருத்தரங்கம்

பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது, “சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசிற்கு அனைத்து உரிமைகளும், சட்டங்களும் இருக்கிறது என பிரபல சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் `எங்களுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது’ என தவறான கருத்தை முதலமைச்சரே தெரிவிக்கிறார்.

அப்படியென்றால் எப்படி பீகாரில் நடத்தினார்கள், பீகாரில் கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தும், நீதிமன்றத்தில் எந்த தடையும் கொடுக்கவில்லை. பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சட்டப்பேரவையில் வெளியிட்டார்கள்.

பீகாரை தொடர்ந்து ஆந்திரா, ஒடிசாவும் சாதி வாரி கணக்கெடுப்பு முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர். ஆனால், சமூகநீதி பேசும் முதலமைச்சர் தயங்குவது ஏன்… என்ன காரணம்… ஏன் அச்சம்?

சாதிகளுக்காக உரிமைகளை, சமூகநீதியைப் பெறும் கட்சிகளாக, இயக்கங்களாகச் செயல்பட வேண்டும். சமூகநீதியின் அடித்தளமே சாதி வாரி கணக்கெடுப்புதான்.

சாதி என்றாலே கெட்ட வார்த்தை என்பதுபோல இருக்கிறார்கள், சாதிய வைத்து அரசியல் நடத்துகிறார்கள். சாதி் பெரும்பான்மை அடிப்படையில்தான் தி.மு.க-வில் பதவி கொடுக்கிறார்கள். ஆனால் வெளியில் சாதி, மதம் இல்லை என்கிறார்கள். வாக்கு வங்கிக்ககாக இப்படி நடந்துகொள்கிறார்கள்.

அன்புமணி ராமதாஸ்

சமூகநீதி என்பது பின்தங்கிய சமுதாயத்தை உயர்த்துவதுதான். மதம், மொழிரீதியாக இட ஒதுக்கீடு இல்லை. ஆனால், சாதிரீதியாக இட ஒதுக்கீடு செய்ய கணக்கெடுப்பு நடத்த ஏன் தயக்கம்?

சென்சஸ் என்பது வேறு, சர்வே என்பது வேறு. சர்வேயை மத்திய அரசும், மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் எடுக்கின்றனர். தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்.

6 முறை ஆங்கிலேயர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள். ஆங்கிலேயருக்கு புரிந்தது, இப்போதைய தி.மு.க அரசுக்கு புரியவில்லை, தூங்குவதுபோல நடிக்கிறது.

இந்தியாவிலயே முதன்முறையாக இட ஒதுக்கீடு கொண்டுவந்த மாநிலம் தமிழகம்தான். பல வரலாறுகள் உள்ள தி.மு.க அரசு, சமூகநீதியை நிலை நாட்ட பயந்துகொண்டிருக்கிறது.

சமூகநீதி மாநாடு, சமூகநீதி கூட்டம், கருத்தரங்கங்கள் எல்லாம் வீண்தான். நாங்களும் முன்னேறணும், எவ்வளவு நாள்தான் அடிமையாக இருப்போம்… தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள். இந்த இட ஒதுக்கீட்டை 9-வது அட்டவணையில் இடம் பெற வைத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இதனை அவர்கள் செய்யவில்லையென்றால் ரத்தாகியிருக்கும்.

கருத்தரங்கம்

மோசமா போச்சு, நாசமா போச்சு என்று சொல்லும் வகையில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கடந்த 3 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அதிகாரம் மட்டும் என்னிடம் இருந்தால், ஒரு மாதத்தில் அனைத்தையும் கட்டுப்படுத்திவிடுவேன், கஞ்சா விற்பனை காவல்துறையினருக்கு தெரியாமல் நடக்காது. இது தொடர்பாக  காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்தால், எல்லாம் சரியாகும். அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கிறோம்.

நாம் அதிகாரத்துக்கு வந்தால், ஒரே நாளில் மது ஒழிப்பு  கொண்டுவருவோம், மது ஒழிப்பு கொண்டுவர மனம் வேண்டும், தைரியம் வேண்டும்.

சென்னையில் இன்றும் போட் சர்வீஸ்தான். குடிநீர், பால், மின்சாரம் இல்லை, இன்னும் ஒருவாரம் கடந்தால் காய்ச்சல் தொற்று வரத் தொடங்கும். 2015-ம் ஆண்டே இது போன்ற பெருவெள்ளம் வரும் என்று சொன்னேன், வந்துவிட்டது. இந்த வெள்ளத்தால் பணக்காரர்கள் இழப்பதை பற்றி கவலை இல்லை. ஆனால், ஏழை எளிய மக்களின் பொருள் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அதே நேரம் இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளத்தையே மறந்துவிடுவார்கள். சினிமாவும், ஐ.பி.எல்-லும் வந்துவிடும். மன்னர்கள் காலத்தில் பிரச்னைகளை மறக்க குடி, கூத்து என இருப்பார்கள். அதுபோல தற்போதும் உள்ளது” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *