இன்றைய சோஷியல் மீடியா உலகில் எங்கு எது நடந்தாலும் அடுத்த நிமிடமே அவை ஃபேஸ்புக், X, யூடியூப், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலமாக மக்களிடையே செய்தியாகப் பரவிவிடுகிறது. அவ்வாறு வேகமாகப் பரவும் செய்திகளில் பல போலி செய்திகளும் உண்மையான செய்திகளைப்போலவே மக்களிடையே பரவி சமூகத்தில் பல அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கின்றன.

இதைத் தடுக்கும் விதமாக அரசு தரப்பில் உண்மை சரிபார்ப்புக் குழு அமைக்கப்பட்டு, போலி செய்திகளை பரப்புவர்களைக் கண்டறிந்து அவர்களின் யூடியூப் சேனல்கள், சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Press Information Bureau (PIB)-ன் உண்மை சரிபார்ப்புக் குழு, போலி செய்திகளைப் பரப்பியதாக ஒன்பது யூடியூப் சேனல்களை முடக்கம் செய்திருக்கிறது. அவை, `பாரத் ஏக்தா நியூஸ், பஜ்ரங் கல்வி, பிஜே நியூஸ், சன்சானி லைவ் டிவி, ஜிவிடி நியூஸ், டெய்லி ஸ்டடி, அப் போலேகா பாரத், சர்காரி யோஜனா அதிகாரி ஆப்கே குருஜி’ ஆகும்.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவில் போலி செய்திகள், தவறான தகவல்களைப் பரப்பும் ஒன்பது யூடியூப் சேனல்களை PIB-ன் உண்மை சரிபார்ப்புக் குழு முடக்கம் செய்திருக்கிறது. இந்த சேனல்களால் பரப்பப்படும் தவறான தகவல்களை எதிர்கொள்ளும் விதமாக ஒன்பது தனித்தனி ட்விட்டர் த்ரெட்களில் (Twitter threads) பல உண்மை சரிபார்ப்புகளை இந்தக் குழு வெளியிட்டது.

`சில மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குத் தடை, மத்திய அமைச்சர்கள் ராஜினாமா, மரணம், ரூ.200, ரூ.500 நோட்டுகள் மீது தடை, வங்கிகள் மூடப்படுகிறது, இந்திய தலைமை நீதிபதி, பிரதமர், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர்களை இழிவுபடுத்தும் அறிக்கைகள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த தவறான தகவல்கள்’ போன்ற போலியான செய்திகளை இந்த சேனல்கள் பரப்பியிருக்கின்றன. இவ்வாறு, யூடியூபில் போலி செய்திகள் பணமாக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயம். தற்போது முடக்கம் செய்யப்பட்ட இந்த யூடியூப் சேனல்களைப் பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்துக்கும் அதிகம். கடந்த ஆண்டு டிசம்பர் முதல், போலி செய்திகளைப் பரப்பும் 26 யூடியூப் சேனல்களை PIB கண்டறிந்திருக்கிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com