புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் நூற்றாண்டு விழா மற்றும் அறிவியல் மையம் கட்டடம் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அந்த விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “உலக அளவில் இந்தியா பின்னோக்கி இருப்பது மகிழ்ச்சி அல்ல. அதேவேளையில் தமிழ்நாடு முன்னோக்கி இருக்கிறது. ஆனால் சுகாதாரத்தில் சற்று பின்னோக்கி உள்ளோம். அதை சரி செய்ய வேண்டியது உள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழ் மொழி தோன்றியதாக கூறுகின்றனர். ஆனால், கடந்த 200, 300 ஆண்டுகளாக தான் அறிவியல் அதிக வளர்ச்சியடைந்துள்ளது. இன்னும் வரக்கூடிய 200, 300 ஆண்டுகளில் அறிவியல் அதீத வளர்ச்சி பெறும். கலாசாரம், பண்பாடு இவற்றைத் தாண்டி அறிவியல் என்பது மிகவும் முக்கியமானது” என்றார்.

அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “ராமர் கோயிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. என்ன ஒன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது ஏற்புடையதல்ல. முழு விபரங்களை தெரியாமல் அவர் கருத்தை தெரிவித்து இருக்க கூடாது. தமிழ்நாட்டில் எந்த கோயிலிலும் ராமர் பூஜை நடத்துவதற்கு எந்த தடையும் யாரும் விதிக்கவில்லை. யார் விரும்பினாலும் கோயிலுக்குச் சென்று பூஜை செய்திருக்கலாம். வழிபாடு செய்திருக்கலாம். ஆனால், நிதி அமைச்சரின் செயல்பாடு தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய இழுக்கு. இதை தமிழர் ஒருவர் சொல்லி இருக்க வேண்டாம் என்பது தான் எனது கருத்து.
ராமர் கோயில் குடமுழுக்கு என்பது பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதி அல்ல. அஸ்ஸாமில் நடந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. அஸ்ஸாமில் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் அமைதியாக மேற்கொண்டார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்து சென்ற போது எந்த ஒரு வன்முறையும் நடக்கவில்லை. அஸ்ஸாமில் ஏன் நடக்கிறது?. அஸ்ஸாம் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்?. யாருடைய ஆதரவு ஊக்கத்தோடு இந்த வன்முறை நடக்கிறது?. இதற்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அந்த முதலமைச்சரை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். நியாயம் கோரி அமைதி பயணத்தை வன்முறையால் குலைக்க முற்படுவது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
