மும்பையில் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணிக் கூட்டம் இன்று சாந்தாகுரூஸிலுள்ள கிராண்ட் ஹயத் ஹோட்டலில் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் காலையிலிருந்தே மும்பைக்கு வரத்தொடங்கினர். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, மராத்திய முறைப்படி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 11:45 மணிக்கு மும்பைக்கு வந்தார். இது தவிர விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி ஆகியோரும் மும்பைக்கு வந்திருக்கின்றனர். மு.க.ஸ்டாலினுக்கு மும்பையிலுள்ள தி.மு.க தலைவர்கள் மற்றும் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிற்பகலில் வந்து சேர்ந்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு வந்திருந்த தலைவர்கள், நாளை காலை இந்தியா கூட்டணியின் லோகோவை வெளியிடுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை மாலையில்தான் நடப்பதாக இருந்தது. ஆனால் இன்று மாலையில் ராகுல் காந்தி திடீரென அவசர பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் பேசிய ராகுல் காந்தி, “அதானிமீதான விவகாரம் குறித்து செபி நடத்திய விசாரணை குறித்து சர்வதேச பத்திரிகை கேள்வி எழுப்பியிருக்கிறது. அதோடு அதானி விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எனவே அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும். இது குறித்து செபி நடத்திய விசாரணையில் அதானிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருப்பதில் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்.

ஏன் விசாரணை நடத்த மறுக்கிறார். ஜி20 மாநாட்டுக்கு முன்பு இந்தியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். மொரிசீயஸ் நாட்டைச் சேர்ந்த அதானி குடும்ப நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள அதானி நிறுவனங்களில் 2013-18-ம் ஆண்டுகளில் ரகசியமாக முதலீடு செய்து, தங்களது பங்கை அதிகரித்துக்கொண்டன.
நான் இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால், எனது மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்தனர். அதானி விவாகரத்தில் மோடி பதற்றமடைந்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இன்று மாலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிமுகக்கூட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இரவு விருந்து கொடுத்து உபசரிக்கிறார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றே மும்பைக்கு வந்துவிட்டார். அவர் நேற்று நடிகர் அமிதாப் பச்சன், உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு ரக்ஷா பந்தனையொட்டி ராக்கி கயிறு கட்டினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
