ஒரே நாடு ஒரே தேர்தல்: சாதக பாதகங்களும்… ஆதரவு, எதிர்ப்பு

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட, கடந்த 2019 ஜூன் 19-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அழைப்புவிடுக்கப்பட்ட 41 கட்சிகளில், 19 கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்றன. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், “பெரும்பாலான கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் கூட இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எப்படி என்றுதான் கேட்கின்றன. கருத்துகளைக் கேட்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது இந்த அரசின் திட்டம் அல்ல, இந்த நாட்டின் திட்டம் என்பதை தனது தொடக்க உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கருத்து தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், விரைவில் இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்து குறிப்பிட்ட கால நிர்ணயத்துக்குள் அறிக்கை கேட்க உள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

ராஜ்நாத் சிங்

இதனையடுத்து இந்த திட்டத்துக்கு மாநிலங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. மத்திய அரசோ, ‘அடிக்கடி தேர்தல் நடத்துவதால் அதிக செலவாகிறது. இதனால் அரசு நிர்வாகம் மற்றும் மக்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்று கூறி, இந்த திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கடந்த ஜனவரி 16-ஆம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும், என மத்திய சட்ட ஆணையம் கட்சித் தலைமைகளுக்கு கடிதம் அனுப்பியது.

ராஜ்நாத் சிங் – ஸ்டாலின்

அதற்கு பதிலளித்த அதிமுக, தனது ஆதரவை பதிவு செய்தது. திமுக கொடுத்த கடிதத்தில், ‘1951 முதல் 1967-ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. பின்னர், சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியவில்லை. மேலும், 6, 7, 9, 11, 12 மற்றும் 13-வது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதேநேரம், அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி ஆளுநரும் ஆட்சியைக் கலைக்கலாம். ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது என்பது மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்த திட்டத்துக்காக அரசைக் கலைத்தால் தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் ஆகும். எனவே, இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று இப்போது போலவே அப்போதும் தன் எதிர்ப்பை வலுவாக வைத்தது.

அமித் ஷா – ராம் நாத் கோவிந்த் – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவதுபோல் அமையும்’ என்கிற விமர்சனத்தை முன் வைத்தனர் இடதுசாரிகள். இவ்வாறாக ஆதரவு, எதிர்ப்பு, இத்திட்டம் கொண்டுவருவதன் அவசியம், விமர்சனம் என ஒரு பக்கம் இருக்க… மத்திய பாஜக அரசோ, வரும் நாடாளுமன்ற தேர்தலிலேயே அமலுக்கு கொண்டுவருவதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதன்படி இப்போது, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக்குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் தற்போதுள்ள கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை இக்குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் இவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகியவற்றில் தேவைப்படும் திருத்தங்களை ஆய்வு செய்து அது குறித்து இக்குழு பரிந்துரைக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே இதன் நோக்கம்” என இக்குழு குறித்து தெரிவித்துள்ளது மத்திய அரசு. அதோடு இந்த மாதத்திலேயே நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவும் திட்டமிட்டுள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்த திட்டம் கொண்டு வருது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் பிரதமர் பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமா?:

இப்போதைய நிலையில், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால், நாடு முழுவதிலும் ஐந்து வருட ஆட்சிக்காலத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட வேண்டும். இதில், அவை அமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் முடிந்துள்ளன என்பதை கணக்கில் கொள்ள முடியாது. ஒருவேளை ஆட்சி கலைத்தால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது. இருந்தாலும், இந்த தேர்தல் முறையை படிப்படியாகவே அமலாக்க சாத்தியம் உண்டு. உதாரணமாக, அடுத்த ஓரிரு மாதங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகியமாநிலங்களில் சட்டப்பேரவைதேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிசா, அருணாச்சலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, ஹரியானா, மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. புதிய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே 12 மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. இத்துடன், கடைசி ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் ஆட்சிக் காலம் பாக்கி உள்ள மாநிலங்களையும் இந்த தேர்தலுடன் சேர்த்து நடத்தும் சாத்தியங்களும் உள்ளன. இந்தப் பட்டியலில், ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் பிகார் இடம்பெற்றுள்ளன. இந்த 15 மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என இரு தரப்பினரின் ஆட்சிகள் இடம் பெற்றுள்ளன. வரும் 2024 மக்களவை தேர்தலின் போதே நாட்டின் பாதி மாநிலங்கள் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிவிடுகின்றன. மீதமுள்ள மாநிலங்களுக்கு இந்த தேர்தலோடு நடத்துவதற்காக ஏதாவது சட்ட திருத்தங்கள் கொண்டுவரலாம். அல்லாது, அடுத்தடுத்த தேர்தல்களில் இணைப்பதற்காக திட்டங்கள் உருவாகலாம்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாதகங்கள்:

இந்த தேர்தல் முறையால் இந்தியாவுக்கு கிடைக்கும் பல்வேறு பலன்களும் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட்டு உள்ளன. `கடந்த 2019 மக்களவை தேர்தலில் மட்டும் சுமார் ரூ.60,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதில், மத்திய அரசின் செலவுடன் அரசியல் கட்சிகளின் செலவும் அடங்கும். இதில் சட்டப்பேரவை தேர்தல்களையும் சேர்த்தால் தேர்தல் செலவு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும். இந்த செலவுத் தொகையில் பெரும்பகுதி இந்தியாவுக்கு மிச்சமாகும். நாடாளுமன்றம், சட்டசபைக்கு தேர்தல்கள் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும் போது இலவசங்கள், மானியங்கள் என்று அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்திற்கு ஏற்படும் பல்வேறு சிரமங்களும் குறையும். அதிகாரிகள் தங்கள் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தலாம். இதன் பலன் பொதுமக்களுக்கு வந்து சேரும். தேர்தல் எனும் பெயரில் பொதுமக்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் பல சேவைகள் தொடரும். மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில காவல் துறைகளின் உழைப்பு விரயமாவது தவிர்க்கப்படும்.’ என்கிறார்கள்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பாதங்கள்:

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளுக்குத்தான் சாதகமாக இருக்கும். கொள்கை ரீதியாக மாநில கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கும் ஆளாக நேரிடும். இதனால் மாநில மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் பின்னுக்கு தள்ளப்படும். நாட்டில் உள்ள எல்லா மாநில அரசுகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் சுயாட்சி உரிமை பறிபோய்விடும். ஒரு மாநிலத்து மக்கள் மீண்டும் ஒட்டுமொத்தமாக நாட்டின் அத்தனை அரசுகளுக்கும் தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றால் அவர்கள் சுயாட்சி கேள்விக்குள்ளாகிறது.

இந்திய வரைப்படம்

கூட்டாட்சி தத்துவத்தைக் குழி தோண்டி புதைக்கும் இந்த முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் முரணாகிவிடும். மத்திய அரசிடம் எல்லா அதிகாரங்களையும் குவிக்கப்பட்டு, மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்து அவற்றை உள்ளாட்சி அமைப்புகள் போல் மாற்றுவது போல் அமைந்துவிடும். அரசியல் ரீதியாக இந்த பிரச்னைகள் இருந்தாலும், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பற்றாக்குறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை போன்ற பல சிக்கல்கள் உள்ளன.

1983-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் ஆண்டறிக்கையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான யோசனை பரிந்துரைக்கப்பட்டது. பின்னர், 1999-ஆம் ஆண்டு சட்ட ஆணைய அறிக்கை அதைக் குறிப்பிட்டது. இப்போது மீண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சூடுபிடித்துள்ளது. இது சாத்தியமா அல்லது சவாலா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.!

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *