கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், தனியார் கரிமணல் கம்பெனியில் இருந்து மாதப் படியாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில் ஆளும் சி.பி.எம் முதல்வரின் மகள் குறித்து எழுந்த விமர்சனம் முக்கியத்துவம் பெற்றது.
இந்தச் சூழலில், புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்த உம்மன் சாண்டி மரணமடைந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடக்கிறது. செப்டம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் திடீரென உம்மன் சாண்டியின் மகள் அச்சு உம்மனின் வருவாய் குறித்து, இடதுசாரி அமைப்பின் நிர்வாகியான கேரள தலைமை செயலக முன்னாள் கூடுதல் செயலாளர் நந்தகுமார், சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டார். அதில், உம்மன் சாண்டி முதல்வராக இருந்த நேரத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி அவரின் மகள் அச்சு உம்மன் பிசினஸ் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. நந்தகுமார் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களுடன் மகளிர் ஆணையம், சைபைர் செல் உள்ளிட்டவைகளில் அச்சு உம்மன் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நந்தகுமார் முகநூலில் மன்னிப்புக் கேட்டுப் பதிவிட்டுள்ளார். அதில், “தனிப்பட்ட நபரை நோகடிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. எனது முகநூல் பதிவில் ஒருவர் போட்ட பதிவுக்கு பதிலளித்து போட்ட கருத்து, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தி இருந்ததற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்மையை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. என் கவனத்துக்கு வந்ததும் அந்தப் பதிவை நான் டெலீட் செய்துவிட்டேன். அறியாமல் செய்த தவற்றுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
