அ.தி.மு.க இரட்டை தலைமை விவகாரத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா பக்கங்களிலிருந்தும் பின்னடைவை மட்டுமே சந்தித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இரட்டை சிலை சின்னம், பொதுச்செயலாளர் பதவி, மாவட்டச் செயலாளர்கள் என ஒட்டுமொத்த கட்சியையும் தன் பக்கம் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படியிருக்க, 2024 தேர்தலுக்கு முன்பு மிகப்பெரும் திருப்புமுனையாக பா.ஜ.க-வுடனான கூட்டணியை அதிகாரபூர்வமாக முறித்துக்கொண்டது அ.தி.மு.க.

இதனால், ஏற்கெனவே அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் யார் பக்கம் செல்லப்போகின்றன என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுடன் கைகோத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், 2024 தேர்தல் கூட்டணி தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உட்பட தன் ஆதரவாளர்களுடன் சென்னை தனியார் ஹோட்டலில் இன்று ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “கடந்த ஒரு மாத காலமாக பா.ஜ.க தேசியத் தலைமை தினமும் என்னிடம் தொடர்பில் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையும் நாட்டை ஆளக்கூடிய தகுதியை பா.ஜ.க பெற்றிருக்கிறது. எனவே, பா.ஜ.க தன்னுடைய முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிவிப்போம்.

எடப்பாடி பழனிசாமியை நீக்குங்கள் என்று பா.ஜ.க-விலிருந்து யாரேனும் கூறினால், அ.தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா… தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றங்கள் என்று கூறுவதற்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து செயல்படவும் முடியும்” என்று கூறினார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை மீண்டும் அவர்களே நிரூபித்துவிட்டார்கள். பா.ஜ.க-வுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை நீங்கள் பா.ஜ.க-விடம்தான் கேட்க வேண்டும். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்து, அதற்கான முடிவை எடுப்போம்.

அண்ணாவைப் பற்றி அண்ணாமலை கூறிய தகவல்கள் தவறானவை. ஆனால், அதை அவர் உள்நோக்கத்தோடு எடுத்தார் என்று சொல்ல நான் தயாராக இல்லை. உண்மையான பிரச்னை என்னவென்றால், 2026 தேர்தலில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என்று அண்ணாமலை கூறியதுதான். அண்ணாவைப் பற்றிப் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கவலைப்படவே இல்லை. 2026-ல் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பிரச்னை. மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். 2024-ல் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம். அதோடு, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
