“முதல்வர் ஸ்டாலின் கர்நாடகவில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்தார். கர்நாடகாவில் உள்ளவர்கள் தி.மு.க வெற்றிக்கு உழைப்பார்களா, கர்நாடகாவில் உங்களை கேலி செய்கிறார்கள். உங்களுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ எங்களுக்கு கோபம் வருகிறது!” என்று சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது. பெரியகோயில் அருகேயுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அ.தி.மு.க., பா.ஜ.க பிரிவை நான் விரிசலாக, தற்காலிகமானதாகப் பார்க்கவில்லை. நிரந்தர முறிவாகப் பார்க்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின் கர்நாடகவில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்தார். கர்நாடகாவில் உள்ளவர்கள் தி.மு.க வெற்றிக்கு உழைப்பார்களா, அங்கு உங்களை கேலி செய்கிறார்கள். உங்களுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ எங்களுக்கு கோபம் வருகிறது. தி.மு.க-மீது எனக்கு கருத்து, கொள்கை முரண் இருப்பது வேறு. ஆனால், தமிழ் மண்ணின் முதல்வரை அவமதிப்பது எங்களுக்கு தன்மான இழுக்காகத் தெரிகிறது. இது எங்களுக்குக் கோபமாய் வருகிறது. நாங்கள் போராட்டம் நடத்தினால் வழக்கு போடுகிறார்கள். ஆனால், அங்கு ஒருவர் மீதாவது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதா?

ஒரு நாட்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சட்டத்திட்டங்கள் என்றால், இத்தனை மாநிலங்கள் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழகம், கர்நாடகம் என தனித்தனியாகப் பிரித்து விட வேண்டும். இறையாண்மை, தேசிய ஒற்றுமை எல்லாம் தமிழனுக்கு மட்டும்தானா… மற்ற இனத்துக்குக் கிடையாதா… இது கேவலமாக இருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றி, மாற்றி 60 ஆண்டுகள் கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள். அறிவை வளர்க்கும் கல்வி தரமில்லை. கல்வி ஒரு சந்தையாக இருக்கிறது. உயிரைக் காக்கும் மருத்துவம் தரமில்லை. எனது திட்டம் முதலில் நீர், வயிறு, அறிவு, மருத்துவம் சமமானதாக கிடைத்தல், அதன் பயனாக வேலைவாய்ப்பு இதற்காகத்தான் போராடி வருகிறோம்.
மருத்துவப் படிப்பில் முதுநிலைப் படிப்புக்கு மட்டுமல்லாமல், எம்.பி.பி.எஸ் படிப்புக்கும் நீட் தேர்வை ஜீரோவாக ஆக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வி அடைந்துவிட்டது என்பது மத்திய அரசுக்குத் தெரிந்துவிட்டது. நீட் தேர்வு தரமான மருத்துவரை உருவாக்காது என்றும், தரமான மருத்துவரை சாகடிக்கும் எனவும் தெரிந்த பிறகும், எதற்காக நீட் தேர்வு இருக்கிறது. எனவே, நீட் தேர்வை மொத்தமாகவே ஜீரோவாக ஆக்குவது நல்லது.

சனாதனம் எந்த வடிவில் இருந்தாலும், அதை எதிர்க்க வேண்டும். பெண்கள் இட ஓதுக்கீடு எனக் கூறிய நிலையில், நடிகைகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் முதல் குடிமகள் திரௌபதி முர்மு பழங்குடியினத்தவர், விதவை போன்ற காரணங்களுக்காக அவரை அழைக்கவில்லை. இதுதான் சனாதனம் என்ற உணர்வு. வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும்.
நாம் தமிழர் வெற்றி பெற்றால், வீராணம் ஏரியை துார்வாரி முழுமையாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நான் யாரிடமும் கையேந்த மாட்டேன். காவிரி பிரச்னையைத் தீர்த்துவிட்டால் மத்திய அரசுக்கு அரசியல் கிடையாது. தமிழர்களுக்குத் தண்ணீர் தந்துவிட்டால் கர்நாடகாவுக்கு அரசியல் கிடையாது. உரிய தண்ணீரைப் பெற்றுக் கொடுத்துவிட்டால், தமிழகத்தில் அரசியல் கிடையாது.

காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. அப்போது செய்யாத சாதிவாரி கணக்கெடுப்பை, தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப்போவதாக ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி நடத்திக் காட்ட வேண்டும். மணல் அள்ளக் கூடாது. மரபு வழியில் வீடு கட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆற்று மணலை முடித்துவிட்டு, மலைக்குச் சென்றுவிட்டார்கள். நிலம் பாலைவனமாக மாறி விடும். ஸ்டாலின் டெல்டாகாரன் இல்லை உல்டாகாரன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
