புதுச்சேரி, : புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிய மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.நேற்று மாலை வரை 15.52 செ.மீ., மழை பதிவானது.
அந்தமான் தெற்கு கடல் பகுதியில் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இதனால் புதுச்சேரிக்கு கன மழை எச்சரிக்கையும், சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெய்ய துவங்கிய மழை, இரவு முழுதும் கொட்டியது.இந்த மழை நேற்றும் நீடித்தது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை 5:30 மணிவரை 15.52 செ.மீ., மழை கொட்டியது.
தொடர் கனமழை காரணமாக ரெயின்போ நகரில் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது. அதுபோல் செல்லான் நகர், பாவாணர் நகர், பொய்யாக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
வீடுகளுக்கு புகுந்த மழைநீர்
கருவடிக்குப்பத்தில் இருந்து கிருஷ்ணா நகர் வழியாக குருசுக்குப்பம் கடலில் கலக்கும் வெள்ளவாரி வாய்க்காலில் மழைநீர் முழுதும் நிரம்பி சென்றது.
இந்த வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் சிறிய கிளை வாய்க்கால் சூரியகாந்தி நகர் வழியாக முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா வழியாக செல்கிறது. மழை காரணமாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
மழைநீர் அகற்றம்
திருவள்ளுவர் நகர் டோபிகானா, செல்லான் நகர், ஜீவா நகரில் குடியிருப்புகளுக்கும் புகுந்த மழைநீர் மோட்டார் மூலம் இறைக்கும் பணி நடந்து வருகிறது.
மழை காரணமாக உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட எல்லப்பிள்ளைச் சாவடி, நுாறடிச்சாலை ஆசிரம வளாகத்தில் உள்ள மரம் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது. உழவர்கரை நகராட்சி, தீயணைப்பு துறை இணைந்து மரத்தை வெட்டி அகற்றினர். மின்துறையினர் முறிந்து விழுந்த மின் கம்பத்தை சரிசெய்தனர்.
அதேபோல் புதுச்சேரி பஜார் செயின்ட் லேரன்ட் வீதியில் ஒரு மரமும், குருசுக்குப்பம் என்.கே.சி., பள்ளி அருகே ஒரு மரம் முறிந்து விழுந்தது.
புதுச்சேரி நகராட்சி, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.
தடுப்பணைகள் நிரம்பியது
தொடர் மழை காரணமாக செட்டிப்பட்டு தடுப்பணை, உறுவையாறு தடுப் பணை, நோணாங்குப்பம் தடுப்பணை, கொம்மந்தான்மேடு தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிந்தது.
திருக்கனுார், மடுகரை, நெட்டபாக்கம், பாகூர், கிருமாம்பாக்கம், வில்லி யனுார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com
