நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பு

CityBanner  நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பு

மேலுார் : மேலுார் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்ககோரி வெள்ளலுார் விவசாயிகள் கடையடைப்பு நடத்தினர். நீர் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கள்ளந்திரி- – குறிச்சிபட்டி வரை ஒருபோக பாசனத்தில் 86,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன. பெரியாறு, வைகை அணைகளில் 6 ஆயிரம் மி.க.அடி தண்ணீர் இருந்தால் இப்பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது அரசு விதி.

ஆனால் அணைகளில் போதுமான தண்ணீர் இருந்தும் திறக்காமல் இன்று (நவ.,10) இருபோகத்திற்கு மட்டும் தண்ணீர் திறப்பதாக நீர்வளத்துறையினர் அறிவித்தனர்.

இரண்டு பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வெள்ளலுாரில் விவசாய சங்க நிர்வாகி குறிஞ்சிகுமரன் தலைமையில் பல்வேறு கிராமங்களில் நேற்று கடையடைப்பு நடந்தது.

பின்னர் விவசாய சங்க தலைவர் முருகன், செயலாளர் ரவி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று மேலுார் நீர்வளத்துறை அலுவகத்தை முற்றுகையிட்டனர்.

மாலை வரை விவசாயிகளை காக்க வைத்த செயற்பொறியாளர் சிவபிரபாகரன் பின்னர் கலெக்டரை சந்திக்க கிளம்பினார். மாலை வரை விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளிடம் பேசிய சிவபிரபாகரன் ‘ஒரு போகத்திற்கு 40 நாட்கள் தண்ணீர் திறப்பது குறித்த கோரிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம்’ என்றார்.

அதனால் ஆத்திரமுற்ற விவசாயிகள் ஓரிரு நாளில் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு எடுக்க உள்ளதாக கூறி கலைந்து சென்றனர்.

உசிலம்பட்டி விவசாயிகள் எச்சரிக்கை

திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் வைகை அணையில் தண்ணீர் திறக்கச் செல்லும் அமைச்சர்கள், கலெக்டரை தடுத்து மறியலில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர். உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பு கொண்டது திருமங்கலம் பிரதான கால்வாய். ஆண்டுதோறும் செப்.,15ல் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு தாமதமானதால் திறக்கப்படவில்லை. தற்போது வைகை, பெரியாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

திருமங்கலம் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து செல்லம்பட்டியில் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாசனம் சங்கம் சார்பில் பகவான், பாண்டியன், மூர்த்தி, பா.ம.க., முருகன், ம.தி.மு.க., முனியாண்டி, அ.ம.மு.க., குணசேகரன், பா.பி., முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், செல்லம்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் காசிமாயன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலெக்டரிடம் உதயகுமார் மனு

தண்ணீர் திறப்பு குறித்து கலெக்டர் சங்கீதாவிடம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மனு அளித்தார். அவர் கூறியதாவது: உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டம் 40 ஆண்டு கோரிக்கை. இதில் முன்னாள் முதல்வர் பழனிசாமி காலத்தில் 3 முறை தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் போராடியே பெற வேண்டியுள்ளது. வைகை அணையில் 67 அடி இருந்தாலே இக்கால்வாயில் தண்ணீர் திறக்கலாம். தற்போது கள்ளந்திரியில் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக பாசனம், மேலுாரில் 85 ஆயிரம் ஒருபோக பாசனம், திருமங்கலத்தில் 19,500 ஏக்கர் ஒரு போக பாசனத்திற்கு திறக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. வைகை அணையில் 9 ஆயிரம் மில்லியன் கனஅடி உள்ளது. தற்போது 120 நாட்கள் திறந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. எனவே அப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.dinamalar.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *