திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் ரயில்வே சுரங்கப் பாதையில் வற்றாத நதிபோல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிரந்த தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் ரயில்வே கேட் வழியை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆலங்குப்பத்தில் இருவழி ரயில் பாதையாக மாற்றப்பட்டதையடுத்து, ரயில் போக்குவரத்து அதிகரித்ததால், அடிக்கடி ரயில்வே கேட் மூடும் சூழல் ஏற்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். நீண்ட கால கோரிக்கைக்குப் பின், ரயில்வே துறையினர் ஆலங்குப்பம் கிராமத்தில் 22 ரெடிமேட் பிரிகேஸ்ட் பாக்ஸ்களைக் கொண்டு 90 மீட்டர் துாரத்திற்கு சுரங்கப் பாதையை கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி பணிகளை முடித்து கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
சுரங்கப் பாதையையொட்டி மலட்டாறு செல்வதால் மழைக் காலங்கள் மட்டுமின்றி, வெயில் காலங்களிலும் தண்ணீர் ஊற்று எடுத்து ஆண்டு முழுதும் வற்றாமல் தேங்கி நிற்கிறது.
இதனால் அவ்வழியாகச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் குறிப்பாக 108 ஆம்புலன்ஸ்கள் சுரங்கப் பாதையைக் கடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் பலனில்லை. கலெக்டர் பார்வையிட்டால் அவ்வபோது மின்மோட்டர் வைத்து தேங்கும் நீரை இறைக்கின்றனர். மீண்டும் அடுத்த நாள் தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
மேலும், சுரங்கப் பாதையில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் சுரங்கப் பாதையில் மின் விளக்கு அமைத்துத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு விரைந்து தீர்வு காணாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் ரயில்வே சுரங்கப் பாதையில் வற்றாத நதிபோல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
