மதுரை, : மதுரை மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக விவசாய நிலங்கள், கண்மாய், கால்வாய்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களால் அந்நிலங்கள் பாழாகி வருகின்றன. கற்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மதுரை கிழக்கு, வடக்கு, மேலுார் தாலுகாக்களில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. இக்குவாரிகள் 13 ஆண்டுகளுக்கு முன் ஏலமிடப்பட்டு கற்கள் வெட்டியெடுக்கப்பட்டன. பல குவாரிகளில் விதிமீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் குவிந்ததை தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல குவாரிகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட குவாரிகள் குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் நடப்பதால், 13 ஆண்டுகளுக்கும் மேலாக அவை இயங்காமல் உள்ளன. அன்று வெட்டி எடுக்கப்பட்டஏராளமான கிரானைட் கற்கள் பட்டா, புறம்போக்கு நிலங்களில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
கீழவளவு, மலம்பட்டி, சிவலிங்கம், இலங்கியேந்தல், இடையபட்டி, சருகுவலையபட்டி, தும்பைப்பட்டி கிராமங்களில் வயல்வெளிகளிலும், கண்மாய், கால்வாய்கள் என நீராதாரங்களிலும் உள்ளதால் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
இருதாலுகாக்களிலும் 50 கி.மீ.,க்கும் மேற்பட்ட சுற்றளவில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன. நிலமும், நீர்நிலைகளும் மாசுபடுவதுடன், ஏராளமான நிலங்கள் தரிசாக கிடக்கின்றன.
குவித்து வைக்கப்பட்டுள்ள கற்கள் ஒவ்வொன்றும் பலநுாறு ‘டன்’ எடையுள்ளவை என்பதால் அப்புறப்படுத்துவது எளிதானதல்ல. கற்களை அப்புறப்படுத்தும் முன்பு, அவற்றை மதிப்பீடு செய்து ஏலமிட வேண்டும் என்பதால், தாசில்தார், துணை கலெக்டர் அளவில் 3 குழுக்களை அனுப்பி அரசு ஆய்வு செய்தது. ஒவ்வொரு குழுவின் மதிப்பீடும் வேறுபாடாக இருந்தது. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையிலான சிறப்புக்குழு அக்.,30 முதல் நவ.,1 வரை மேற்கண்ட தாலுகாக்களில் ஆய்வு நடத்தியது. குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பல்வேறு குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றனவே தவிர, குவித்து வைத்துள்ள கற்களை அப்புறப்படுத்தும் பணி தாமதமாகிக் கொண்டே போகிறது. இக்குழுவின் அறிக்கையையும் பெற்று, அக்கற்களை ஏலம்விடுவது உட்பட தொடர் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி பாழ்படும் நிலங்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை, : மதுரை மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக விவசாய நிலங்கள், கண்மாய், கால்வாய்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களால் அந்நிலங்கள் பாழாகி வருகின்றன. கற்களை அகற்ற நடவடிக்கை
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
