திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்பை பெயரளவில் அகற்றியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
திருக்கோவிலுார் செவலை ரோடு, கீழையூர், கடலுார் மெயின் ரோடு என நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது.
கடலுாரில் இருந்து திருவண்ணாமலை மார்க்க வாகனங்கள் அனைத்தும் புறவழிச் சாலையில் செல்வதால், ஆவியூர், சைலோம், கீழையூர், மணம்பூண்டி வழியாக செல்லும் பழமையான சாலையை நெடுஞ்சாலை துறை கண்டு கொள்வதில்லை.
இதன் காரணமாக இப்பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலை குறுகி உள்ளது. போக்குவரத்து அதிகரித்துவிட்ட இச் சூழலில் இச்சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சைலோம், கீழையூர் பகுதிகளில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்து அகற்றும் பணியை நேற்று மேற்கொண்டனர்.
இதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு மின்துறை, வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்கினர்.
இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் சற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலை துறையினர் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் பெயரளவிற்கே பணியை தொடர்ந்தனர்.
ஆக்கிரமிப்பின் முகப்பு பகுதி, சாலையோர குப்பைகள், முள் செடிகளை மட்டுமே அகற்றினர். நெடுஞ்சாலை துறையின் பெயரளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதேபோல் செவலை ரோட்டில் நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையிலும் அலட்சியம் காட்டுவதால் போக்குவரத்து பாதித்து வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்பை பெயரளவில் அகற்றியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.திருக்கோவிலுார் செவலை ரோடு, கீழையூர், கடலுார் மெயின் ரோடு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement