புதுச்சேரி என்றாலே ஒரு காலத்தில் கண்ணாடிபோல பளபளப்பாக மின்னும் சாலைகள் தான் முதலில் நினைவுக்கு வரும். புதுச்சேரி பகுதியில் உள்ள சாலைகளைப் பார்த்தால் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு பொறாமையாக இருக்கும்.
ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை மாறி, தமிழ்நாடு சாலைகளை பார்த்து புதுச்சேரி வாசிகள் பொறாமைப்படும் அளவில் உள்ளது. புதுச்சேரியில் சாலைகளை சரிவர பராமரிக்காமல் பள்ளம், படுகுழியாக உள்ளன.
சாலையில் சிறிய பள்ளம் ஏற்படும்போதே அதனை சரி செய்வது இல்லை. அதனால் தொடர்ச்சியாக வாகனங்கள் செல்லும் போது அந்த பள்ளம் மேலும் பெரிதாகி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
சாலைகள் குண்டும் குழியுமாக மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் குடிநீர் குழாய், மின்சார கேபிள் புதைக்க தோண்டப்படும் பள்ளங்களை முறையாக சீரமைக்காததால், சாலைகள் மோசமாக மாறிவிடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதுபோன்று சாலைகளை சேதப்படுத்துவதை தவிர்க்க, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ‘நடைபாதை சீரமைப்பு சிறப்பு திட்டம்’ ஒன்று தீட்டப்பட்டது.
இதன்படி, மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் சீரமைக்கப்படும். நடைபாதையின் கீழ் ராட்சத குழாய்கள் புதைத்து, அதன் வழியாக கேபிள்கள், பைப்புகள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில், ரூ.120 கோடியில் நகரப் பகுதியில் 130 கி.மீ., தொலைவிற்கு பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டது.
ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டம் அடுத்தாண்டு ஜூன் மாதத்தோடு முடிவடைய உள்ளது. இந்த சூழ்நிலையில், நீண்ட நாட்களாக ஜவ்வாக இழுக்கும் திட்டங்களை ஒவ்வொன்றாக கைவிடும் எண்ணத்தில் மாநிலம் உள்ளது.
அதில், நடைபாதை சீரமைப்பு திட்டமும், சாலையை சேதமாக்குவதை தடுக்கும் திட்டமும் அடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அரசில் 54 துறைகள் உள்ளன. பொதுமக்களின் சேவையை இலக்காக கொண்டு பணியாற்றி வரும் அரசு துறைகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளன. ஆனால், துறைகளுக்குள் போதிய ஒருங்கிணைப்பு இல்லை.
உதாரணமாக, பொதுப்பணித் துறை சார்பில் புதிதாக சாலை அமைக்கப் பட்டதும், மறுநாளே அந்த சாலையில் கேபிள், குடிநீர் குழாய் புதைக்க பள்ளம் தோண்டப் போகிறோம் என சகட்டுமேனிக்கு சாலையை தோண்டி விடுகின்றனர். பணி முடிந்ததும் அந்த பள்ளத்தை சரிவர மூடுவதும் இல்லை.
தோண்டிய இடத்தில் மீண்டும் புதிய சாலைகளை உடனடியாக போடுவதும் இல்லை.
அரசு துறைகளுக்கு ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவதோடு, வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றது.
இது போன்ற சூழ்நிலையில், சாலைகள் சேதமாவதை தடுக்கும் நடைபாதை சீரமைப்பு திட்டம், குழாய் பதிப்பு திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
இந்த திட்டங்களின் மூலம் சாலைகள் சேதமாவது தடுக்கப்படுவதுடன், ஆண்டிற்கு பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும்.
எனவே, எக்காரணத்தை கொண்டும் இத்திட்டத்தை கைவிடாமல் அரசு செயல்படுத்த வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com