புதுச்சேரி நகரப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஜீவா நகரில் துவங்கி வாணரப்பேட்டை, உப்பளம் வழியாக கடலில் கலக்கும் உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.
உப்பனாறு மேம்பாலம்
காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே துவங்கி, மறைமலை அடிகள் சாலையை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மீது மேம்பாலம் கட்டும் திட்டத்தில், கடந்த 2008ம் ஆண்டு காங்., ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது பணி துவங்கியது. ரூ. 3.5 கோடி மதிப்பிற்கு பைல் பவுண்டேஷன் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், பணி கிடப்பில் போடப்பட்டது.
மக்கள் எதிர்ப்பு
அதன்பின்பு கடந்த 2016ம் ஆண்டு, ஹட்கோ வங்கியின் ரூ. 37 கோடி கடன், மாநில அரசின் பங்குத்தொகை ரூ. 7.15 கோடி சேர்த்து, மேம்பாலம் பணி மீண்டும் துவங்கியது. முதல்வர் ரங்கசாமி, இரண்டாவது முறையாக பணியை துவக்கி வைத்தார்.
இந்த பாலம், 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்ட இருவழி சாலையாகவும், இருபுறமும் 1.5 மீட்டர் அகல நடைபாதை கொண்டதாக அமைக்கப் படுகிறது.
கடந்த ஆட்சியின்போது மழை காலத்தில் வாய்க்காலை ஒட்டியுள்ள நகர்களில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகும் என எதிர்ப்பு கிளம்பியதால், மேம்பாலம் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. கோடை காலத்தில் மட்டும் பணிகள் நடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் மேம்பாலம் பணி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டே சென்றது.
கூடுதல் செலவு
மாநில அரசின் 7.15 கோடி பங்கு தொகையில் 1.15 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. மாநில அரசின் மீத தொகை ரூ. 6 கோடி வழங்கப்படவில்லை.வெகு நாட்களாக நடந்த பணி மற்றும் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக, ஏற்கனவே நிர்ணயித்ததை விட கூடுதல் செலவினம் ஏற்பட்டதாக கூறி கட்டுமான நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு பணியை நிறுத்தியது.மேலும், கூடுதலாக ஆன செலவினத்தை வழங்க கோரி கட்டுமான பணியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் (ஆர்பிடேஷன்) வழக்கு தொடரப்பட்டது.
முட்டுக்கட்டை
ஆர்பிடேஷனில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, நிர்ணயிக்கப்பட்ட தொகை மற்றும் 3 ஆண்டிற்கான வட்டியுடன் சேர்த்து ரூ. 9 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது. கட்டுமான நிறுவனத்தின் ஒர்க் ஆர்டரை ரத்து செய்தால் மட்டுமே ஆர்பிடேஷனில் முடிவு செய்த தொகையை வழங்க முடியும். எஞ்சிய பணிகளுக்கு புதிய டெண்டர் விட்டு துவக்க முடியும்.
ஆனால், நிறுத்தப்பட்ட மேம்பாலம் பணிக்கான டெண்டர் ஒர்க் ஆர்டரை ரத்து செய்ய தலைமை செயலர் மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால் இப்பணியை முடிப்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.
நடவடிக்கை தேவை
புதுச்சேரி நகரில் பெருகி வரும் வாகனங்களால் ‘டிராபிக்’ பிரச்னை உச்சக்கட்டத்தில் உள்ளது. நகரின் பிரதான சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாத நிலை உள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மேம்பாலங்கள், பைபாஸ் சாலைகள் அமைத்தால் மட்டுமே சரிசெய்ய முடியும்.
இந்த நிலையில், இரண்டு முறை பூமி பூஜை செய்து துவக்கப்பட்ட உப்பனாறு வாய்க்கால் மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. உப்பனாறு பாலம் கட்டி முடித்து காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலையை இணைத்தால், அண்ணா சாலையில் வாகன போக்குவரத்து பாதியாக குறையும்.
திருவள்ளுவர் சாலை, லெனின் வீதி உள்ளிட்ட இணைப்பு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து பிரச்னையும் தீரும்.
எனவே, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேம்பாலத்தை விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆனது. அதை மிஞ்சும் வகையில், கடந்த 2008ம் ஆண்டு துவங்கி 15 ஆண்டுகள் கடந்தும் உப்பனாறு மேம்பாலம் பணி முடிக்க முடியாமல் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com
