கடலுார்: கடலுார் அருகே பெண்ணையாற்றின் கரைப் பகுதியில் முழுமையாக, வெள்ள தடுப்பணை அமைக்கப்படாததால், இத்திட்டம் பயனளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
‘வானலில் வெண்ணை உருகும் முன்பு, பெண்ணையில் வெள்ளம் பெருகும்’ என்பது பழமொழி. அவ்வளவு விரைவாக பெண்ணையாற்றில் வெள்ளம் வந்துவிடும் என்பார்கள். கர்நாடகா மாநிலம் மைசூர் நந்தி துர்கா என்ற இடத்தில் பெண்ணையாறு உருவாகி பல சிறு சிறு அணைகளை கடந்து சாத்தனுார் வருகிறது. அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் திருக்கோவிலுார், விழுப்புரம், சொர்ணாவூர் அணைகட்டு வழியாக, கடலுாரில் பெண்ணையாறு வழியாக வங்கக்கடலில் கலக்கிறது.
கடலுார் மாவட்டம் பிற மாவட்டங்களின் வடிகாலாக இருப்பதால், இதன் வழியாக ஓடும் கெடிலம் மற்றும் பெண்ணையாறுகளில் ஆண்டுதோறும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அதிக அளவில் தண்ணீர் வருவதால்ய கரைகள் உடைந்து அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதன் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கெடிலம் ஆற்றின் கரைகள் ஏற்கனவே, பலப்படுத்தப்பட்டதால் கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது கெடிலம் ஆற்றின் கரைகள் பலமாக இருந்ததால் பாதிப்பு ஏற்படவில்லை.
அதேப்போல், பெண்ணையாற்று கரையையும் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டு, ரூ. 5.75 கோடியில் கரை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக பெண்ணையாறு பாலத்தில் இருந்து நாணமேடு கிராமம் வீரன் கோவில் வரை கரை அமைக்கப்பட்டுள்ளது. பெண்ணையாற்றின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கரையில் பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, சரஸ்வதி நகர், நாணமேடு, உள்ளிட்ட பல கிராம எல்லைகளை கடந்து செல்கிறது.
இந்த கரை உப்பனாற்றை கடந்து சென்றால்தான் முகத்துவாரத்தை அடைய முடியும். ஆனால், நாணமேடு கிராமத்துடன் பணி நிறுத்தப்பட உள்ளது.
அதனால் வெள்ளநீர் கிளை உப்பனாற்றின் வழியாக மீண்டும் கிராமங்களுக்கு உட்புகும் அபாயம் உள்ளது. பல கோடி செலவு செய்து கரை அமைத்தும், அது முழுமையாக பயனளிக்காத நிலை ஏற்படும் என, கிராம மக்களின் ஆதங்கப்படுகின்றனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி சிங்காரவேலன் கூறுகையில், பெண்ணையாறு கரை அமைக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இதுவரை 90 சதவீதப்பணிகள் நிறைவடைந்துள்ளன. பெண்ணையாறு பாலத்தில் இருந்து கிழக்குப்பகுதியில் நாணமேடு வரை கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பின்னர் அரசிடம் அனுமதி பெற்று தொடர்ந்து பணி செய்யப்படும். கிராமங்களில் மழைக்காலத்தில் தேங்கும் மழைநீர் வடிய வைக்க 3 இடங்களில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாலத்தின் மேற்கு திசையில் உள்ள கரையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை முழுமையாக அகற்றப்பட்ட பின் ஒரு ஷட்டர் அமைக்கப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com