கச்சிராயபாளையம்- கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் திட்ட பணிகளைவிரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுபுற பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. இப்பகுதியில் நெல், கரும்பு ஆகியவற்றையே பிரதான பயிராக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் கடந்த 1997 ம் ஆண்டு கச்சிராயபாளையத்தில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 துவங்கப்பட்டது. இந்த ஆலை நாளொன்றுக்கு 2500 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டது. கடந்த 2010 ம் ஆண்டு 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.7.49 கோடி செலவில் இணை மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இங்கு அமைக்கப்படும் இணை மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் தினம் 15 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும்.
ஆலை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள 10 மெகா வாட் மின்சாரம் மின் வாரியத்திற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டது. இந்த மின் உற்பத்தி திட்டத்திற்காக ஆலை அங்கத்தினர்களிடமிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டது. இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் 50 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துள்ளது.
தொடர்ந்து நடந்த ஆட்சி மாற்றத்தால் மின் உற்பத்தி திட்ட பணிகளுக்கு முறையாக நிதி ஒதுக்கவில்லை. இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் மின் உற்பத்தி நிலையம் அமைக்க கொண்டு வரப்பட்ட தளவாடப் பொருட்கள் துருபிடித்து வீணாகி மக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கச்சிராயபாளையம் சர்க்கரை ஆலையில் பாதியில் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் துவங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த 2018 ம் ஆண்டு மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. அன்றைய துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் மீண்டும் துவங்கப்பட்ட மின் உற்பத்தி திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து 2018- 19 ம் ஆண்டின் அரவை பருவத்திலேயே மின் உற்பத்தி நிலையம் செயல்பட துவங்கும் என உறுதியளித்தனர். ஓரிரு மாதங்களில் மீண்டும் மின் உற்பத்தி நிலைய பணிகள் கிடப்பில்போடப்பட்டுள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டு துவங்கப்பட்ட பணிகள், 13 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் முடிவடையவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்து வருகின்றனர். மேலும் பெரும்பகுதி தளவாடப் பொருட்கள் அதிகளவில் துருபிடித்து உள்ளதால் அதன் தரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் அரசு ஒதுக்கீடு செய்த கோடிக்கணக்கான ரூபாய் விரையமாவதுடன் விவசாயிகளிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணமும் அதற்கு பயன்படாமல் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலைய பணிகளை மீண்டும் துவங்க மக்கள் பிரதிநிதிகள் , கூட்டுறவு துறை மற்றும் ஆலை நிர்வாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் ,பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கச்சிராயபாளையம்- கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் திட்ட பணிகளைவிரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

