கோவையில் பொய்த்தது தென்மேற்கு பருவமழை! மாவட்டத்தில் பல இடங்களில் மழையளவு பூஜ்யமாக பதிவு

Southwest Monsoon in Coimbatore! Many places in the district recorded zero rainfall   கோவையில் பொய்த்தது தென்மேற்கு பருவமழை!  மாவட்டத்தில் பல இடங்களில் மழையளவு பூஜ்யமாக பதிவு

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டில் முற்றிலும் பொய்த்துள்ளது; அதிலும் ஆகஸ்ட்டில் பெய்யாமல் வறட்சி நிலவியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்துக்கு, தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை என இரு பருவமழைக் காலங்களிலும் மழை கிடைக்கிறது. ஜூனிலிருந்து செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழை காலத்தில், சராசரியாக 190 மி.மீ., அளவு மழை பெய்யும். ஆனாலும் வடகிழக்குப் பருவமழையில்தான் கோவைக்கு அதிக மழை கிடைக்கும்.

இருப்பினும், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கணிசமாகப் பெய்யும் மழையால், ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கும். அணைகளும் ஓரளவுக்கு தண்ணீர் தேங்கிவிடும்; அதற்கு மேல் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்யும் மழையில், அணைகள் நிரம்பிவிடும். இதுவே காலம் காலமாக நடக்கின்ற இயற்கை நடைமுறையாகவுள்ளது.

ஆனால் இந்த ஆண்டில், கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில், தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்திருப்பதாகப் பதிவாகியுள்ள நிலையில், கோவையில் சராசரிக்கு கீழேதான் மழை பெய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளின் புள்ளி விபரத்தைப் பார்த்தாலே, இந்த ஆண்டின் மோசமான நிலை தெரியவருகிறது.

மழை குறைவு

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னுார் உள்ளிட்ட 14 இடங்களில், மழைமானி வைத்து, மழையளவு கணக்கிடப்படுகிறது. இதைத் தொகுத்து, சராசரி மழையளவு கணக்கிடப்படுகிறது. இதில் வால்பாறை மலைப்பகுதியில் வழக்கமாக அதிகளவு மழை பதிவாகும். இந்த ஆண்டில் அங்கும் மழை பெருமளவில் குறைந்துள்ளது.

கடந்த 2021ல், ஜூனில் 2771 மி.மீ., ஜூலையில் 5803 மி.மீ., ஆகஸ்ட்டில் 3222 மி.மீ., மழை பெய்துள்ளது; இதன் சராசரி முறையே 198 மி.மீ., 415 மி.மீ.,மற்றும் 230 மி.மீ.,ஆகும். இதுவே கடந்த ஆண்டில் இதே மூன்று மாதங்களில், 2335 மி.மீ.,7819 மி.மீ., மற்றும் 6752 மி.மீ.,என்ற அளவில், அதாவது சராசரி 167 மி.மீ., 558 மி.மீ., மற்றும் 482 மி.மீ.,என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

இந்த ஆண்டில், 14க்குப் பதிலாக 23 இடங்களில் மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் மொத்த மழையளவு, ஜூனில் 1613 மி.மீ.,ஆகவும், ஜூலையில் 6314 மி.மீ.,ஆகவும், ஆகஸ்ட்டில் 920 மி.மீ.,ஆகவும் பதிவாகியுள்ளது. இதன் சராசரியைக் கணக்கிட்டால், 70, 274 மற்றும் 40 மி.மீ.,என்ற அளவில்தான் மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் வறட்சி

ஆகஸ்ட்டில் வரலாறு காணாத அளவுக்கு கோவையில் மழை குறைந்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில், மாதம் முழுவதும் மழையளவு பூஜ்யமாகவே பதிவாகியுள்ளது.பல ஆண்டுகளில், இதேபோல மழை பொய்த்திருந்தாலும், கோவையின் காலநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் இந்த ஆண்டில், மழையும் முற்றிலும் பொய்த்து விட்ட நிலையில், வெயிலும் பின்னி எடுத்தது.பல இடங்களில், வெப்பநிலை 32, 34 என்று எகிறி, ஆகஸ்ட் வறட்சி என்ற பெயர் பெற்றுள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் துாறல் மழை, கோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாகவுள்ளது. அணைகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், செப்டம்பர் மழையையே பெரிதும் நம்பியுள்ளது கோவை.

-நமது சிறப்பு நிருபர்-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.dinamalar.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *