உளுந்துார்பேட்டை-உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டடப்பணிகள் முழுமை பெறாததால் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தும்பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கின்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தினசரி 1500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் அதிக அளவில் புறநோயாளிகள் வந்து செல்வதால் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். சென்னை, சேலம், திருச்சி, மதுரை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மையப் பகுதியாக உளுந்துார்பேட்டை இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு அனுப்பி வைக்கும்போது உரிய சிகிச்சை பெற காலதாமதம் ஆவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
அரசு மருத்துமனையில் மருத்துவ உபகரணங்கள். போதிய மருத்துவ வசதிகள் இருந்தாலும் மேல் சிகிச்சைக்காக வெளியே அனுப்பி வைக்கின்றனர்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவமனையில் 16 டாக்டர்கள், 14 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
துப்புரவு பணியாளர்கள் 16 பேர் உள்ளனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கட்டு கட்டும் ஊழியர் 4 பேர் உள்ளனர். மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது.
ஆனால் இதற்கு தகுந்தார்போல் டாக்டர்கள், செவிலியர் பணியிடங்களை அதிகரிப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
அவ்வாறு தாமதம் ஏற்படும் போது நோயாளிகளின் உறவினர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் இங்கு அவசர பிரிவு கட்டடம் இடிக்கப்பட்டு ரூ.6.17 கோடி மதிப்பில் இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டட பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் இருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி கள்ளக்குறிச்சி வந்தபோது, காணொலி மூலம் இந்த புதிய கட்டடத்தை திறந்துவைத்தார்.
அமைச்சர் திறந்து வைத்த புதிய கட்டடத்தில் இன்னும் சில வசதிகள் செய்ய வேண்டி உள்ளதால் கட்டடம் பூட்டியே கிடைக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உயர் அதிகாரிகள் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து, அதற்கான வசதிகளை செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், புறநோயாளிகளாக வருபவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில்கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என மருத்துவ ஊழியர்களை உடனடியாக நியமித்து விபத்தில் சிக்குவோர், புறநோயாளிகள் என அனைவருக்கும் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனையாக மாற்றியமைக்கவேண்டும்.
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து அதிக அளவில் மேல் சிகிச்சுக்காக பரிந்துரை செய்வதை நிறுத்தி தகுந்த பிரிவுகளுக்கான டாக்டர்களை நியமித்து இங்கேயே சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்களை நியமிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com
