திருக்கோவிலுார்: தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலக்கும் அவலத்தைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வற்றாத ஜீவ நதியாக இருந்த தென்பெண்ணை, புராண இதிகாசங்களில் தட்சணா பினாகினி என போற்றப்பட்டது. இந்த புனிதமான நதியின் வரலாறு மிகப் பழமையானது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வரை வற்றாமல் ஓடிக்கொண்டிருந்த ஆறு தற்போது அதன் புனிதத்தை இழந்து கழிவுநீர் கலக்கும் கூவமாக மாறியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவெடுக்கும் தென்பெண்ணையாற்றில் பெங்களூரு சுற்று வட்டார பகுதிகளின் ஆலைக் கழிவுகள் கலக்கும் அவலம் அங்கேயே துவங்கி விடுகிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக மட்டுமன்றி இப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் தென்பெண்ணையாறு விளங்கி வருகிறது.
போற்றி பாதுகாக்க வேண்டிய ஆற்றில் திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் வழிந்தோடி கலக்கிறது.
இந்த இடத்தில்தான் தீர்த்தவாரி படித்துறை உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் இங்கு தீர்த்தவாரி வைபவம் நடப்பது வழக்கம்.
ஆனால் இன்று நகரின் கழிவுகள் கொட்டப்பட்டு, ஆறு ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவுநீர் கால்வாய் நேரடியாக ஆற்றில் கலக்கும் வகையில் நிலைமை தலைகீழாகி விட்டது.
மூங்கில்துறைப்பட்டில் துவங்கி வழி நெடுகிலும் ஆறு சாக்கடையாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருக்கோவிலுாருக்கு அடுத்த கரையில் இருக்கும் விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி, அரகண்டநல்லுார் பகுதி கழிவுநீர் முழுதும் தென்பெண்ணை ஆற்றில் விடப்படுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தென்பெண்ணையாறு நதிக்கரை பல கிலோ மீட்டர் துாரம் ஆக்கிரமிக்கப்பட்டு குப்பைகள் கொட்டி மேடாகி, பன்றிகள் வளர்க்கும் பண்ணையாக மாற்றப்பட்டிருக்கும் அவலம்தான் உச்சபட்ச அபத்தம்.
பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டும் அகற்றாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் துணை போகின்றனர்.
இதன் காரணமாக கழிவுநீர் ஆற்றில் கலந்து புனிதமான ஆறு குப்பைகள் நிறைந்த கூவமாக மாறி வருகிறது.
இந்த அவலத்தைப் போக்க திருக்கோவிலுார் நகராட்சி மட்டுமல்லாது, நதிக்கரையில் இரண்டு பகுதியிலும் இருக்கும் நகரம் மற்றும் கிராம பகுதி நிர்வாகம் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்கு பொதுப்பணித் துறையின் கடுமையான நடவடிக்கை அவசியம்.
ஆற்றில் கழிவுநீர் கலப்பது இப்படியே தொடர்ந்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு இப்பகுதியில் இயங்கும் கூட்டு குடிநீர் திட்டம் முடங்கும் காலமும் வெகு துாரத்தில் இல்லை என்பதை மக்களும், அதிகாரிகளும் உணர வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com
