இது தொடர்பாக I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, “அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஓசிசிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற இரண்டு பொருளாதார பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு, கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு நாடுகள் வழியாகச் சென்று மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாருடையது? அதானியுடையதா அல்லது வேறு யாருடையதா?” என்று கேள்வி எழுப்பி இருக்கும் ராகுல் காந்தி, ‘இந்த முறைக்கேட்டில் வெளிநாட்டை சேர்ந்த இருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டையும் முன் வைத்திருக்கிறார்.

“அதானியின் சகோதரர் வினோத் அதானியும், அவருடன் சேர்ந்து இரண்டு வெளிநாட்டவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அந்த இரண்டு வெளிநாட்டவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள்? இதில் தனக்கு தொடர்பு இல்லை என்பதை பிரதமர் மோடி நிரூபிக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது பிரதமர் மோடிக்கு ஏற்பட்டிருக்கும் பதற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம். நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது அவருக்கு பதற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே, எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி திடீரென ரத்தானது. அதானி விவகாரம், பிரதமருக்கு மிக நெருக்கமாக இருப்பதால், அவர் பதற்றத்தில் இருப்பதாக நினைக்கிறேன். அதானி விவகாரத்தை தொடும் போதெல்லாம், பிரதமர் மிகவும் சங்கடமாகவும், மிகவும் பதற்றமாகவும் இருக்கிறார்” என்று கூறி, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும் சம்பந்தப்படுத்தி பேசியிருக்கிறர் ராகுல் காந்தி.
நன்றி
Publisher: www.vikatan.com
