திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘‘இந்த மாவட்டத்திலுள்ள நாயக்கனேரி கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கைக்குப் பதவி பிரமாணம் செய்துவைப்பதில், என்ன சங்கடம் இருக்கிறது. இந்தளவு கல்வியறிவு வந்தும்கூட சமுத்துவம், சகோதரத்துவம் என்பது பெரும் கனவாகவே இருக்கிறது. இது, அந்த தங்கைக்கு அவமானம் கிடையாது. நமக்கான தலைகுனிவாகத்தான் பார்க்கிறேன்.
பிரச்னை வெளியில் வந்த பிறகாவது, பதவியேற்க விட்டிருக்க வேண்டும். சில ஊர்களில் கொடியேற்றக் கூட விடுவதில்லை. இன்னும் சில ஊர்களில், மதிப்பதே கிடையாது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை தகர்த்தி, இந்த இழிநிலையை மாற்ற வேண்டும். உண்மையிலேயே, நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் விவகாரம், தேசிய இனத்துக்கே அவமானம். அந்தப் பெண் ‘ஆதி தமிழ் குடி’ என்பதைத் தவிர வேறு எதாவது தடையிருக்கிறதா?! அடிதட்டில் இருக்கிற பெண் என்பதால், பதவி பிரமாணம் செய்துவைக்காமல் இரண்டரை வருடமாக இழுக்கிறார்கள்.
இதுவே, பொதுக்குழு தீர்மானம் செல்லுமா, செல்லாத என்று காலையில் வழக்குப்போட்டால், மாலையில் தீர்ப்பு வருகிறதா, இல்லையா? அதையெல்லாம், விரைந்து எடுத்து ஒரு தீர்வைச் சொல்கிறீர்கள். இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியாதா? இன்னும் இரண்டரை வருடத்துக்கு அப்புறம் பதவிக்காலம் அதுவாகவே முடிந்துவிடும். அதன்பிறகு, வென்றும் பயனில்லையே! காலம் தாமதித்துக் கிடைக்கிற நீதி என்பது நீதியே கிடையாது. அதுவும் அநீதி தானே! எனக்குப் பசிக்கு சோறு தராத கடவுள், நான் செத்தப் பிறகு சொர்க்கம் தரும் என்று எப்படி நம்புவது. இது ஒரு வேடிக்கைதான். இந்த மண், மக்கள் பிரச்னைக்கு எவன் முன்னாடி வந்து நிற்கிறானோ, அவனே இங்கு தலைவன். ஆகவே, பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com