மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த விழாக்களில் அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதால், விஷமிகள் தாக்குதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, மும்பையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். எனவே வரும் ஜனவரி 18-ம் தேதி வரை மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு டிரோன்கள், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பாராகிளைடர்கள், சிறிய விமானங்கள், ஹாட் பலூன்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் அனுமதியைப் பெற்று இதனை பறக்க விடலாம் என்று போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மராத்தா சமுதாயத்தினரும் மும்பையில் போராடத்திற்கு தயாராகி வருகின்றனர். மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று கோரி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜராங்கே பாட்டீல், மாநில அரசுக்கு டிசம்பர் 24-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருக்கிறார்.


`24-ம் தேதிக்குப் பிறகு ஒரு மணி நேரம்கூட தாமதிக்க மாட்டோம்” என்று ஜராங்கே, மாநில அரசை எச்சரித்திருக்கிறார். ஆனால் இப்போது மராத்தா சமுதாயத்திற்கு மாநில அரசு இட ஒதுக்கீடு கொடுக்கும் நிலையில் இல்லை. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி பிப்ரவரி மாதம்தான் அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகுதான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் இதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசிக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம் மராத்தா சமுதாயத்திற்கு இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கொடுக்க மாநில தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சகன் புஜ்பால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எனவே மும்பையில் வரும் 24-ம் தேதி ஜராங்கே ஆதரவாளர்கள் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு மராத்தா சமுதாயத்தினர் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வரும் 24-ம் தேதி மும்பைக்கு வர திட்டமிட்டுள்ளனர். இதனால் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com