நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பா.ஜ.க-வினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநில அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா, ‘கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார். சனாதனம் பற்றிய கருத்தை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். அதுவரையில் மகாராஷ்டிராவுக்குள் அவர் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த கர்நாடகா முன்னாள் முதல்வரான பசவராஜ் பெம்மை, ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘உதயநிதி ஹிட்லர்’ என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும்’ என்று விமர்சித்திருக்கிறார்.
பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவு தலைவரான அமித் மாள்வியா, “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா, டெங்குவுடன் ஒப்பிட்டிருக்கிறார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக்கூடாது என்றும் பேசியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிற 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்” என்று ட்விட்டர் எக்ஸில் பதிவிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
