புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் விளக்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப்போல, உச்ச நீதிமன்றம் கூறியதற்குப் பிறகு ஆளுநர் முதலமைச்சரை அழைத்திருக்கிறார். இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சர் வெள்ள நிவாரணப் பணிகள் முடிவுற்ற பிறகு, ஆளுநரைச் சந்திப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. எல்லா மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டு ஆளுநரும், முதலமைச்சரும் சந்தித்துப் பேசுவதனால் எவ்வளவு தூரம் அது பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகை இருக்கக்கூடிய ஒரு தெருவில் நடந்த சம்பவத்துக்கு, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, தேசிய புலனாய்வு விசாரணை தேவை என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்திய இறையாண்மைக்கு எதிராக எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், முதல் குரல் எழுப்பக்கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர். இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையானவர். தேச நலன் காக்கப்படுவதில் தி.மு.க-வுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. அன்றைக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியவர்கள், இன்று எந்த அமைப்பை அழைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இது, நாடாளுமன்றத்துக்குள்ளேயே நடந்திருப்பது என்பது கண்டிக்கத்தக்கது என்று சொன்னாலும்கூட மிகுந்த பாதுகாப்பை மீறி, நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடைபெற்ற 21-ம் ஆண்டு அனுசரிப்பு தினத்தில், அந்த நாளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மிக மிக அசிங்கம் என்று தெரிந்தும், பாதுகாப்பு கோளாறு எப்படி ஏற்பட்டது… எப்படி உள்ளே இருவர் சென்று கலர் புகைக்குண்டை எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.

இதையெல்லாம் விசாரணை அமைப்புதான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். உள்ளேயே சதி நடந்ததா அல்லது வெளியே சதி நடந்ததா, இதில் யாருக்குத் தொடர்பிருக்கிறது என்பதையெல்லாம் எந்த விசாரணை அமைப்பு விசாரிக்கப் போகிறதோ, அந்த அமைப்பு கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். நல்ல தீர்ப்பு நாட்டு மக்களுக்குக் கிடைத்தால் சரி. 2001-ல் இது போன்ற சம்பவம் நடைபெற்று, 2004-ல் எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றது. இன்றைக்கும் நாட்டு நலன் கருதி தங்களது பாதுகாப்பு கருதி இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இந்தியா கூட்டணிக்கு நிச்சயம் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எப்போதும் ஒரு கட்சியின் எம்.பி அனுமதி கடிதம் கொடுக்கும்போது, தனக்கு நன்றாக அறிமுகமானவர்களுக்குத்தான் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் எப்படி பா.ஜ.க எம்.பி கொடுத்தார் என்று தெரியவில்லை. நான்கு பேர், ஆறு பேர் என்றெல்லாம் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எவ்வாறு ஒன்று கூடினார்கள் என்பது வியக்கத்தக்க ஒன்று. அவர்களுக்கு எவ்வாறு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மைசூர் எம்.பி அனுமதி கடிதம் கொடுத்து பரிந்துரை செய்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க-வுக்கு எப்படிப் பேச வேண்டும் என்பதை, தமிழிசை சௌந்தர்ராஜன் சொல்லித் தர வேண்டியது இல்லை. அதேபோல், நாங்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது.
நன்றி
Publisher: www.vikatan.com
