உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தபோது, மேடையில் இருந்த சிலர் `உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவேண்டும்’ என்று தெரிவித்தனர்.
அவர்களை அமைதிப்படுத்திய மனோஜ், “இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் கொடுப்பதால், அரசுக்கு நாம் அவகாசம் கொடுக்கவேண்டும். அரசு இட ஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைத்திருக்கிறது. எனவே கூடுதல் அவகாசம் பிடிக்கும். ஆனால், அனைத்து மராத்தா சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க உறுதிசெய்யுங்கள். மகாராஷ்டிரா அரசு மராத்வாடாவிலுள்ள மராத்தாக்களுக்கு குன்பி சமுதாயத்துக்கு வழங்கப்படும் சாதிச்சான்றிதழ் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
ஆனால், மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மராத்தாக்களுக்கு அந்தச் சான்றிதழ் கொடுக்கப்படவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். எனவேதான், அரசுக்குக் கூடுதல் அவகாசம் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா அமைச்சர்கள் மனோஜ் ஜராங்கேயைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக, மாநில அரசு நியமித்திருக்கும் கமிட்டியில் இடம்பெற்றிருக்கும் நீதிபதி சுனில், முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவர் கெய்க்வாட் ஆகியோர் மனோஜைச் சந்தித்து, உடனே இட ஒதுக்கீடு வழங்குவதிலுள்ள சிக்கல்கள் குறித்து எடுத்துக் கூறினார்கள்.
மேலும் நிச்சயம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அதேசமயம் அதற்குக் கால அவசாகம் தேவை என்றும் தெரிவித்தனர். இந்தச் சந்திப்புக்கு சுயேச்சை எம்.எல்.ஏ பச்சுக்காடு ஏற்பாடு செய்தார். மனோஜ் மாநில அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். அதில் மராத்தா சமுதாயத்தினரைக் கணக்கெடுப்பு செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்பை நியமிக்கவேண்டும் என்றும் கணக்கெடுப்பை தாமதப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் மராத்தா சமூகத்துக்கு நிச்சயம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
