25 ஆண்டுகளுக்கு மேலாக காந்தி – நேரு குடும்பத்தின் வசம் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை, தன் வசமாக்கி, அந்தப் பதவியின் நாற்காலியில் ஓராண்டை முழுதாக நிறைவு செய்திருக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே. `இந்த இடம் அவருக்கு அவ்வளவு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. அதற்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார் அவர்’ என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள். 1942-ம் ஆண்டு கர்நாடகாவின் பிதார் மாவட்டம், பல்கி வட்டத்திலுள்ள வரவட்டி என்ற கிராமத்தில் பிறந்தார் மல்லிகார்ஜுன கார்கே. குல்பர்காவில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பட்டமும், அதே பகுதியில் இருக்கும் எஸ்.எஸ்.எல் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.
பிறகு நீதிபதி சிவராஜ் பாட்டீலிடம் ஜூனியராகப் பணியாற்றினார். தொழிற்சங்க வழக்குகளில் ஆஜராகி வெற்றி பெற்றதால், அவர்களிடத்தில் செல்வாக்குமிக்க நபராக உருவெடுத்தார். அதேநேரத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார். 1969-ல் தனது 27-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது அவருக்கு குல்பர்கா மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி வழங்கப்பட்டது. 1972 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குர்மித்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1978, 1983, 1985, 1989, 1990, 1994, 1999, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு பல்வேறு துறைகளில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
பின்னர் 2005-ம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 2008-ல் நடந்த தேர்தல், 2014 தேர்தல்களில் வெற்றி பெற்றவர், 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் முதன்முறையாக தோல்வியுற்றார். 2020 ஜூன் 12-ல் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வான கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இந்த நேரத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

அதில் 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் கார்கே. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூருக்கு 1,072 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்துதான் 25 ஆண்டுக்காலமாக காந்தி – நேரு குடும்பத்தின் வசம் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி, அவர்களின் விசுவாசியான கார்கேவுக்கு கிடைத்தது. இருப்பினும் அந்த நேரத்தில், “ `கார்கேவால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது. காந்தி குடும்பத்தின் பொம்மையாகவே இருப்பார்’ என பலரும் தெரிவித்தார்கள். ஆனால், அதையெல்லாம் உடைத்தெறிந்து, தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிபெற்றிருக்கிறார்” என்கின்றனர் காங்கிரஸார்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், “தலைவராகப் பதவியேற்றது முதல் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார், கார்கே. குறிப்பாக ராஜஸ்தான், கர்நாடகாவில் இருக்கும் உட்கட்சிப் பிரச்னைகள் முடிவுக்கு வந்ததற்கும், பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து `I.N.D.I.A’ கூட்டணியை அமைப்பதிலும் கார்கேவின் பங்கு மிகவும் முக்கியமானது. அதாவது கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் – பா.ஜ.க இடையில் கடுமையான போட்டி நிலவியது. அப்போது மூன்று சர்வேக்கள் நடத்தி, அதனடிப்படையில் ஒரு மாதகாலமாக மாநிலம் முழுவதும் பயணித்து, பொதுமக்களிடம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார் கார்கே.

ராகுல் காந்தியை அழைத்து வந்து மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினார். பா.ஜ.க அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தார், கார்கே. முடிவில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தது. அந்த நேரத்தில் முதல்வர் பதவியைப் பிடிப்பதில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே நடந்துவந்த மறைமுக போட்டியை முடிவுக்குக் கொண்டுவந்தார். இதேபோல் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்தப் பதவியைப் பிடிப்பதற்கு சச்சின் பைலட் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தார். குறிப்பாக துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளை ராஜினாமா செய்தார்.
இதனால் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டது. இது சோனியா காந்திக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சற்று அமைதியாக இருந்தார், சச்சின் பைலட். இருப்பினும் நாளடைவில் இருவருக்குள்ளும் மீண்டும் பிரச்னை வெடித்தது. இதற்கிடையில் அந்த மாநிலத்துக்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதால் டெல்லிக்கு தலைவலியைக் கொடுத்தது. அப்போது இந்தப் பிரச்னையில் தலையிட்ட கார்கே, இருவரையும் அழைத்து பலமுறை பேசினார். `இருவருமே முக்கிய தலைவர்கள்தான். நாம் ஒற்றுமையாக இல்லை என்றால், பா.ஜ.க-வுக்குச் சாதகமாக சூழல் மாறிவிடும்’ என எடுத்துரைத்தார். இதனால் அவர்களுக்குள் இருக்கும் பிரச்னை முடிவுக்கு வந்தது. இருவரும் ஒன்றாக இணைந்து வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்கிறார்கள்.

இதுபோல் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கார்கேவின் பங்கு முக்கியமானது. குறிப்பாக இறுதிவரை முரண்டு பிடித்து வந்த மம்தாவை தங்கள் பக்கம் கொண்டுவந்திருக்கிறார், கார்கே. இருப்பினும் இடப் பங்கீட்டுப் பேச்சுகள் I.N.D.I.A கூட்டணியில் தொடங்கப்படவில்லை. பிரதமர் வேட்பாளரையும் அறிவிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. இதேபோல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளிடையே சில உரசல்கள் இருந்தாலும், முடிந்தவரை பல இடங்களில் ஒன்றாகப் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றனர். மறுபுறம் காங்கிரஸ் கமிட்டியை சீரமைப்பதில் அவரது பணி சற்று தொய்வாகவே இருக்கிறது. கடந்த ஆண்டில் காங்கிரஸின் உதய்பூர் மாநாடு நடந்தது.

அதில், ‘ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே கொடுக்கப்படும். 50% இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால், இவையெல்லாம் விரைவில் செயல்படுத்தப்படும் என்பதற்கான உடனடி அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் குறைந்தது நான்கு குடும்பங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் சில குறைபாடுகளும் இருக்கின்றன. எப்படியும் விரைவில் அனைத்தையும் சரிசெய்வார் என நம்புகிறோம். இதேபோல் அமித் ஷாவை வைத்து தேர்தலிகளில் தொடர் வெற்றி பெற்று வந்த மோடிக்கு, இவரது வருகை ‘கிலி’யைக் கொடுத்திருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸுக்கும், ராகுல் காந்திக்கும் புத்துணர்வைக் கொடுத்திருக்கிறது” என்றனர் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
