2016-ல் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். பின்னர், அதே மாதத்தின் இறுதியில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு ஆளான சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறைக்குச் சென்ற அடுத்த ஆண்டு, மீண்டும் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, கட்சியிலிருந்து சசிகலாவை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து, அ.தி.மு.க-வின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த முடிவை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. பின்னர், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, `அ.தி.மு.க-விலிருந்து என்னை நீக்கியது செல்லாது’ என அ.தி.மு.க-வின் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் மனுவை நிராகரிக்குமாறு, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மனு தாக்கல்செய்தனர். இருவரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரலில், சசிகலாவின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்தது.

இந்த முடிவை எதிர்த்த சசிகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பைத் ஒத்திவைத்தது. இதுவொருபக்கம் நடக்க, அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து, இறுதியில் ஓ.பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்களும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட, அ.தி.மு.க விதிகளில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட்டு கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கோப்புகளில் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியே இருக்கிறார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவுநாளான இன்று, சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, `அ.தி.மு.க-விலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ என்பதை உறுதிசெய்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com