திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராகக் கேள்வியெழுப்ப பிரபல தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப்பொருள்கள் வாங்கியதாகவும், தன்னுடைய நாடாளுமன்ற இணையதள ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைப் பகிர்ந்ததாகவும், பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். அதோடு, இதில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்குக் கடிதமும் அனுப்பியிருந்தார்.

அதன்படி, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, மஹுவா மொய்த்ராவை நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. அதேசமயம் சம்பந்தப்பட்ட ஹிராநந்தனியை நேரில் அழைத்து விசாரணை நடத்தாததற்குக் கண்டனம் தெரிவித்த மஹுவா மொய்த்ரா, தன்மீதான விசாரணையின்போதுகூட தன்னுடைய தனிப்பட்ட வாழ்வு குறித்த கேள்விகளைக் கேட்டதாக, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவை விமர்சித்திருந்தார்.
பின்னர், வெறுமனே பெரிதாகக் காரணம் எதுவும் குறிப்பிடாமல், `மஹுவா மொய்த்ரா தவறு செய்திருக்கிறார். அவரை எம்.பி பதவியிலிருந்து நீக்கவேண்டும்’ என விசாரணைக் குழு முடிவுசெய்து, அறிக்கையை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி, அவரைப் பதவி நீக்கம்செய்ய பரிந்துரை செய்தது. நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் இந்த முடிவை, மஹுவா மொய்த்ரா உட்பட சில எம்.பி-க்கள் மட்டும் எதிர்த்தனர்.

இருப்பினும், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் பதவி நீக்கப் பரிந்துரை அறிக்கை அமர்வுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படியே, இன்று நடைபெற்ற கூட்டத்தில் அந்த அறிக்கை அமர்வுக்கும் வந்தது, இதில் மஹுவா மொய்த்ரா பதவிநீக்கமும் செய்யப்பட்டார். மஹுவா மொய்த்ரா மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
