தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் போது, பாஜக தனது பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் என பலரை ஈடுப்படுத்தியது.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி பார்க்கையில், கடந்த தேர்தல்களை விட அதிக இடங்களை பாஜக வென்றிருந்தாலும், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சிகளுக்கும் அடுத்த இடமே கிடைத்துள்ளது. 119 இடங்களில் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு தனி மாநிலமாக உருவானதில் இருந்து தெலங்கானாவின் முதல்வராக கே.சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார். ஆனால் இம்முறை பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதைப் அவர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தெலங்கானா தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியாமல் போனாலும், காமாரெட்டி தொகுதியில் வென்று பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தெலங்கானா தேர்தலில் காமாரெட்டி தொகுதி அதிக கவனம் பெற்றிருந்தது. காரணம், தெலங்கானாவின் தந்தை என்று அழைக்கப்படும் தற்போதைய முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒருபுறம், காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி மறுபுறம் என இருபெரும் தலைகள் மோதிக்கொண்ட தொகுதி அது. ஆனால், அவர்கள் இருவரையும் தோற்கடித்துள்ளார் பாஜகவின் வேட்பாளர் கே.வி ரமணா ரெட்டி.
சந்திரசேகர் ராவ் 59,911 வாக்குகளையும், ரேவந்த் ரெட்டி 54,916 வாக்குகளையும் பெற்றனர். ஆனால், ரமணா ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று 6,741 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
