கடந்த சில தினங்களாக சென்னையிலிருந்து எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமா? கோயம்பேடு பேருந்து நிலையமா? என்று பெரும் குழப்பம் இருந்து வருகிறது.
இவ்வளவு நாள்களாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நன்றாக பழகிப்போன மக்களுக்கு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வது மிக சிரமமாக இருக்கிறது. இதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மெட்ரோ, எலெக்ட்ரிக் ரயில் போன்ற வசதிகள் இல்லாமல், வெறும் பேருந்து வசதி மட்டுமே இருப்பது முக்கிய காரணம் ஆகும்.

அரசு பேருந்து என்றால் தானே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போக வேண்டும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கோயம்பேட்டிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்றிருந்த நிலைக்கும் கடந்த 22-ம் தேதி தமிழக அரசு ஒரு செக் வைத்து உள்ளது. அதாவது ஆம்னி பேருந்துகள் 24/01/2024 (நேற்று) முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்ற ஆணையை கடந்த திங்கள்கிழமை பிறப்பித்தது.
இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தினர்.
அவர்கள் கூறுகையில், “ஜனவரி 26,27,28 தேதிகளுக்கான ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு கிட்டதட்ட 90 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இதனால் பயணிகள் கோயம்பேட்டிலிருந்து தான் பிற ஊர்களுக்கு செல்ல டிக்கெட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது திடீரென்று கிளாம்பாக்கத்தில் வந்து பேருந்து ஏற வேண்டும் என்று கூறினால் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்” என்று பேசினர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன், “பொதுவாக சாதாரண நாள்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார விடுமுறை நாள்களில் 1,250 ஆம்னி பேருந்துகளும், விழாக் காலங்களில் 1,600 பேருந்துகளும் சென்னையிலிருந்து இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது புதியதாக திறக்கப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் நிறுத்த மட்டுமே இடம் உள்ளது. மீதி பேருந்துகளுக்கான பதில் அரசிடம் இல்லை.
கடந்த 22-ம் தேதி வந்த அறிக்கையில் 24/01/2024-லிருந்து ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் வெறும் இரண்டு நாள்களில் பேருந்து நிலையம் மாற்றம் பற்றி அனைத்து பயணிகளிடமும் தெரிவிப்பது, பேருந்துகளை கிளாம்பாக்கத்திற்கு கொண்டு செல்வது என்பது மிக மிக சிரமமானது.
அதனால் நேற்று கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது. அந்த பேருந்துகளை கோயம்பேட்டில் நிறுத்தி வைக்க போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் கிளாம்பாக்கத்தை தாண்டி எந்த ஆம்னி பேருந்துகளையும் போலீசார் சென்னை நகருக்குள் வர அனுமதிக்கவில்லை. இதனால் பயணிகளும், நாங்களும் மிகவும் சிரமப்பட்டோம்.

2003-ம் ஆண்டு கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே சுமார் 400 ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க இடமும், 50 டிராவல்ஸ் அலுவலகத்திற்கான இடங்களும், 20 இதர கடைகளுக்கான இடங்களும் தரப்பட்டது. ஆனால் தற்போது புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இனி ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும். அதனால் ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தான் ஏற வேண்டும். ஈ.சி.ஆர் மற்றும் பெங்களூர் வழியாக செல்லும் பேருந்துகளில் மட்டும் கோயம்பேட்டிலிருந்தே ஏறிக்கொள்ளலாம்” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com
