கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்து முடிந்தது. அதில் மாநில தலைவராக ராகுல் மாம்கூட்டல்(Rahul Mamkoottaththil) என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அடூரைச் சேர்ந்த ராகுல் , 53,398 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில் வர்க்கி தோல்வியடைந்தார். இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போலி வாக்காளர் அட்டை பயன்படுத்தி, போலி உறுப்பினர் அட்டை தயாரித்து மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஒரு காரில் வெளியே சென்ற பெனி நயினான், பினில் பினு, அபி விக்ரம், விகாஸ் கிருஷ்ணா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 24 போலி உறுப்பினர் அட்டைகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைதானவர்கள் சென்ற கார் ராகுலுக்கு சொந்தமானது எனவும், அந்த கார் பி.ஆர்.ராகுல் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட நான்குபேரும் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எனவும், அதில் அபி விக்கிரமின் செல்போனை பரிசோதித்ததில் தமிழ் நடிகர் அஜித்குமாரின் போட்டோவை பயன்படுத்தி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமார் போட்டோ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த அடையாள அட்டையில் கே.அஜித்குமார், அடூர், ஏழன்குளம் என்ற முகவரி இருந்துள்ளது. இதையடுத்தே 24 கார்டுகளும் போலியானவை என போலீஸார் உறுதிபடுத்தி உள்ளனர்.

போலியாக ஒரு ஆப் உருவாக்கி, அதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து, அதன் மூலம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை தயாரித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மேலும் பூதாகரமாக வெடிக்கும் எனக்கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
