தெலங்கானா தேர்தல் களமானது, மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ், மத்தியில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மும்முனைப் போட்டியால், சூடுபிடித்திருக்கிறது. இதில், `மத்தியில் எப்படி பா.ஜ.க ஊழல் அரசாக இருக்கிறதோ, அதுபோல இங்கு பி.ஆர்.எஸ் ஊழல் அரசாக இருக்கிறது. பா.ஜ.க-வின் பி டீம்தான் பி.ஆர்.எஸ்’ எனப் பிரசாரம் செய்துவருகிறது காங்கிரஸ்.

அதோடு, `மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம், முதியோர்களுக்கு மதம் ரூ.4,000 ஓய்வூதியம், ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 15,000-மும், விவசாயக் கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000-மும் நிதியுதவி, மாணவர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு கல்வி உதவித்தொகை’ என ஆறு முக்கிய வாக்குறுதிகளை அளித்திருக்கிறது.
மேலும், தெலங்கனா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவர் பாட்டி விக்ரமார்கா, “தெலங்கானா மக்களுக்கு ஆறு உத்தரவாதங்களை நிறைவேற்ற கடவுள் முன்னிலையில் நான் பிரமாணப் பத்திரத்தில் கையொப்பமிட்டு, சத்தியம் செய்திருக்கிறேன்” என X சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் மட்டும் நிரூபித்துவிட்டால் அரசியலிலிருந்தே விலகுவதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு, முதல்வர் கே.சி.ஆரின் மகள் கவிதா சவால் விடுத்திருக்கிறார்.

ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். நீங்கள் (காங்கிரஸ்) ஆளும் மாநிலங்களில் ஒரு மாநிலத்திலாவது, தெலங்கானாவைவிட குறைந்தபட்சம் ஒரு வேலைவாய்ப்பையாவது நீங்கள் அதிகமாக அளித்திருந்தால், தனிப்பட்ட முறையில் அரசியலிலிருந்தே நான் விலகுகிறேன். அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால் அரசியலிலிருந்து ராகுல் காந்தி விலகுவாரா… நிரூபிக்க முடியாவிட்டால், தெலங்கானாவிலிருக்கும் வேலையில்லா இளைஞர்களிடம் பொய் சொல்லாதீர்கள், மக்களை ஏமாற்றாதீர்கள்” என்று கூறினார்.
தெலங்கானாவில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததும், டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com