மஞ்சள் மாவட்டத்தில் சீனியர் அமைச்சருக்கும், பிரகாசமான பிரமுகருக்குமிடையே முட்டல், மோதல் அதிகரித்துக்கொண்டே போகிறதாம். தொடக்கத்தில் சீனியருடன் இணக்கமாக இருந்த மிஸ்டர் பிரகாசத்துக்கு, இளைஞரணியில் மாநிலப் பொறுப்பு கிடைத்த பிறகுதான் கொம்பு முளைத்ததாம். தனக்கு எதிரிகளே இல்லை என நினைத்துக்கொண்டிருந்த வேளையில், பிரகாசமானவரின் சேட்டையால் அப்செட் ஆகியிருக்கிறாராம் அமைச்சர். ‘அண்ணா… அந்த பிரகாசப் புள்ளியும், பணிவானவரின் பையனும் ஒண்ணா படிச்சவங்க. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, போன ஆட்சியில பிரகாசம் பல காரியங்களைச் சாதிச்சிருக்காரு. அதையெல்லாம் வெளியில எடுத்துவிடுவோமா?’ என்று கேட்டிருக்கிறார்கள் அமைச்சரின் ஆட்கள். ‘போங்கய்யா… நானே அ.தி.மு.க-வுல இருந்துதானே வந்தேன்… பேக் ஃபயர் ஆகிடும்’ என்று ‘நோ’ சொல்லிவிட்டாராம் அமைச்சர்!
தமிழக அமைச்சரவையில் அந்த வாரிசுப் பிரமுகர் சேர்த்துக்கொள்ளப்பட்டு, நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், ஏதாவது ஆய்வுக் கூட்டம் நடந்தால் மட்டும்தான் தலைமைச் செயலகத்தை எட்டிப் பார்க்கிறார். மற்ற நாள்களில் இல்லத்திலேயே அரசுக் கோப்புகளையும், அதிகாரிகளையும் பார்த்துக்கொள்கிறாராம். தலைமைச் செயலகத்தில் அவருக்கான அறை இன்னும் தயாராகாததுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் நாசர் இருந்த அறைதான் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு புகார்களில் சிக்கிப் பதவியிழந்தவரின் அறை என்பதால், எதற்கு வம்பு என ‘பக்காவாக வாஸ்து’ பார்த்து அறையை முழுவதுமாக மாற்றிவருகிறாராம் புதிய அமைச்சர்!
தி.மு.க-வின் வர்த்தகப் பிரிவின் மாநில துணைத் தலைவர் பழஞ்சூர் செல்வத்தின் மகள் திருமணத்துக்கு வந்திருந்த உதயநிதியை வரவேற்று, பட்டுக்கோட்டையில் நிறைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த நேரத்தில், ‘நீதிமான் உதயநிதி ஸ்டாலினே… லெட்சுமணன் மரணத்துக்கு நீதி வேண்டும்…’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டியிருந்தார்கள் சிலர். இதென்ன என்று உதயநிதி தரப்பு விசாரித்திருக்கிறது. “சில மாதங்களுக்கு முன்பு, பழஞ்சூர் செல்வம் தன்னிடம் டிரைவராக வேலை பார்த்த லெட்சுமணன் மீது போலீஸில் திருட்டுப் புகார் ஒன்றை அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதில் மனம் உடைந்த லெட்சுமணன் தற்கொலை செய்துகொண்டதாகவும், லெட்சுமணன் குடும்பத்துக்கும், போலீஸுக்கும் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து செல்வம் தரப்பு பிரச்னையை முடித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த விவகாரம் தெரிந்த பழஞ்சூர் செல்வத்தின் எதிர்க் கோஷ்டியினர்தான் இப்படி போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்” என்று விளக்கம் சொல்லப்பட்டதாம். கட்சிக்குள் விசாரணை தொடங்கியிருப்பதாகத் தகவல்!
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் காவிக் கட்சி வேட்பாளராகும் கனவில் மிதக்கிறார் சபரிமலை சாமியின் பெயரைக்கொண்ட எக்ஸ் ஆர்மிக்காரர். சமீபத்தில் குமரி மாவட்டத்துக்கு நடைப்பயணமாக வந்த மாஜி காக்கியை, மகிழ்விக்கும் வகையில் போஸ்டர், ஃபிளெக்ஸ் என அமர்க்களப்படுத்தினாராம் ஆர்மி. ‘வெறும் கவுன்சிலராக இருக்கும் உங்களுக்கு ஏன் அண்ணே இந்த திடீர் டெல்லி ஆசை?’ என்று சிலர் கேட்க, ‘ராணுவத்தில் இருந்தவன் நான்… அதனால இந்தி நல்லாத் தெரியும்.
தேசபக்தியும் அதிகம். நம்ம கட்சிக்கு இந்த ரெண்டு தகுதியும் போதாதா?’ என்று கேட்கிறாராம். `சீனியர்களே சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் இருக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்கு வந்தவருக்கு ஆசையைப் பாரு…’ என்று கேலி செய்கிறார்கள் காவிக் கட்சியினர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்ட அ.தி.மு.க., மூன்று பிரிவுகளாகத் தொகுதிகளைப் பிரித்திருக்கிறதாம். நிச்சய வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகள், வாய்ப்பிருக்கும் தொகுதிகள், தேறாத தொகுதிகள் என்று பட்டியல் போட்டு அதற்கேற்ப பசை ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறதாம். அந்த நிச்சய வெற்றிப் பட்டியலில் கோவை, பொள்ளாச்சி, நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட ஏழு தொகுதிகள் இடம்பெற்றிருப்பதுடன், தலைநகர் மற்றும் தென்மாவட்டத் தொகுதிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், தலைநகரின் மைக் பிரமுகரும், தென்மாவட்ட ‘ரைஸிங் சன்’ பிரமுகரும் அப்செட்டாம்!
நன்றி
Publisher: www.vikatan.com