துணிவானவருக்கு நெருக்கமாக இருக்கும் மாம்பழ மாவட்ட இளவரசு, கட்சி நடவடிக்கைகளில் அதிகம் தலையிடுகிறார் எனக் கொதிக்கிறார்கள் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள். குறிப்பாக, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காலியாக இருக்கும் கட்சிப் பொறுப்புகளில் தனக்கு நெருக்கமானவர்களையே நியமிக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறாராம் அவர். “இளவரசின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறோம்…” என டெல்டா மாவட்ட சீனியர்கள் சிலர் உள்ளூர் மாஜியிடம் புலம்பியிருக்கிறார்கள். இதனால், மாம்பழத்து இளவரசை கட்டுப்படுத்திவைக்கச் சொல்லி துணிவானவரிடம் வலியுறுத்தினாராம் அந்த டெல்டா மாஜி. “கோபமடைந்த மாம்பழ மாவட்ட இளவரசு, தன்னைப் பற்றித் தலைமையிடம் வத்திவைத்த அந்த மாஜியைப் பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறார்” எனக் கிசுகிசுக்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில்.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில்கூட பாதிக்கப்படாத போரூர் ஏரிப் பகுதிக் குடியிருப்புகள் இந்த மிக்ஜாம் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனவாம். விசாரித்தால், “அந்தப் பகுதியில் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட சர்ச்சைக்குரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் சுமார் 15 ஏக்கர் அளவில் பிளாட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தைச் சரிக்கட்டி, ஏரிக்குத் தண்ணீர் செல்லும் இரண்டு கால்வாய்களைச் சற்றுத் தள்ளி அமைத்துவிட்டார்களாம்.

அப்படி அமைக்கப்பட்ட கால்வாய்களில் ஒன்று நிலப்பரப்பைவிட உயரமாக இருந்ததால், சொட்டுத் தண்ணீர்கூட அதன் வழியே ஏரிக்குள் செல்லவில்லை. எல்லாம் ஊருக்குள் புகுந்துவிட்டது. ஐயப்பன்தாங்கலிலிருந்து பரணிபுத்தூர் வரை சுமார் பத்து கிலோமீட்டர் பகுதிகள் நீரில் மூழ்க அதுவும் ஒரு காரணம்” என மேலிடத்துக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறதாம். இதனால், அந்த ரியல் எஸ்டேட் நிறுனத்தின் மீதும், அண்ணாநகர் பிரமுகர் மீதும் செம கடுப்பில் இருக்கிறதாம் மேலிடம்.
‘ராமர்’ மாவட்டத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதாம். அந்த ஐ.பி.எஸ் அதிகாரி, மாவட்ட எஸ்.பி-யாகப் பணியாற்றிய காலகட்டத்தில், அங்கு பயிற்சி டி.எஸ்.பி-யாக இருந்த பெண் அதிகாரி ஒருவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டதாம். அதன் பிறகு ஐ.பி.எஸ் அதிகாரி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அந்த நட்பு வளராமலேயே போய்விட்டது. தற்போது பதவி உயர்வு பெற்று மீண்டும் ராமர் மாவட்டத்துக்கே வந்திருக்கிறார் அந்த ஐ.பி.எஸ் அதிகாரி.

வந்ததும் வராததுமாக, பெண் அதிகாரியுடனான தனது பழைய நட்பைப் புதுப்பித்ததோடு, அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முயன்றாராம் ஐ.பி.எஸ் அதிகாரி. ஆனால், அதற்கு அந்தப் பெண் அதிகாரி உடன்படவில்லையாம். தொடர்ந்து அவர் டார்ச்சர் கொடுக்க, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி பொறுக்க முடியாமல் மேலிடத்துக்குப் புகார் தட்டிவிட்டாராம். விரைவில் அந்த மூத்த அதிகாரிமீது விசாரணை பாயும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
டிசம்பர் 23-ம் நடைபெறவிருந்த ‘சனநாயகம் வெல்லும்’ மாநாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை டிசம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அறிவித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். சென்னை மழை காரணமாக மாநாடு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகக் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேதி மாற்றத்துக்கு காரணமே முதலமைச்சரின் தேதி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்தான் என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

சென்னை பெருமழை பாதிப்பால் டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் நடக்கவிருந்த இளைஞரணி மாநாட்டை டிசம்பர் 24-ம் தேதிக்கு மாற்றியது தி.மு.க. எனவே, ‘‘முதல்நாள் திருச்சியில் நடக்கும் வி.சி.க மாநாட்டில் பங்கேற்று, உடனடியாக தி.மு.க இளைஞரணி மாநாட்டிலும் பங்கேற்கும் சூழலில் முதல்வர் இல்லை” என வி.சி.க-வுக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்தே, மாநாட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தன்னைத்தானே `பேராசிரியர்’ என்று சொல்லிக்கொள்ளும் அந்தத் தூங்கா நகர பா.ஜ.க பிரமுகர், ‘நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டே தீருவேன்’ என ஓராண்டாகத் தீயாக வேலை பார்த்துவந்தார். அவரையே அந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகக் கட்சியும் நியமிக்க, கனவு கைகூடிவிடும் என்ற உற்சாகத்தில் இருந்தார் அவர். தான் சார்ந்த சமூகம் மட்டுமன்றி, தொகுதியிலுள்ள மற்ற முக்கியச் சமூக சங்க நிர்வாகிகளைச் சந்தித்தும், சங்கக் கூட்டங்களில் பங்கேற்றும் அவர்களது ஆதரவைப் பெறுவதற்கான வேலைகளிலும் தீவிரம் காட்டிவந்தார்.
அதன் ஒரு பகுதியாக டாக்டர் தலைவர் ஒருவரின் சமூக ஆதரவைப் பெறத் திட்டமிட்டு, அவர்களைப் பற்றிய வரலாற்று நூல் ஒன்றைத் தனது ஆதரவாளர் மூலம் எழுதவைத்திருக்கிறார். அதை வெளியிடுவதன் மூலம் அந்தச் சமூகத்தின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என நினைத்தவர், நூல் வெளியீட்டு விழாவுக்கு டாக்டர் தலைவரை அழைத்திருக்கிறார். உஷாரான டாக்டர் தலைவரோ, ‘அதெல்லாம் வர முடியாது’ எனப் பட்டென்று மறுத்துவிட்டாராம். ‘ஐயோ 10 சதவிகித ஓட்டு போச்சே…’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்புகிறாராம் அந்தப் பேராசிரியர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
