'பூட்டு – தமிழ்நாடு, சுத்தியல் – பாஜக, சாவி –

சேலத்தில் வரும் 17 ம் தேதி தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதனையொட்டி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,

“ஈ.டி, ஐ.டி, சி.பி.ஐ என ஒன்றிய அரசு எந்தவகையான நெருக்கடியாக கொடுத்தாலும் அதையெல்லாம் எதிர்த்து வலிமையோடு எதிர்க்கும் மாவட்டமாக கரூர் உள்ளது. இரு தினங்களுக்கு முன் லஞ்சம் வாங்கிய இ.டி அதிகாரியையே தமிழக காவல்துறை இப்போது தூக்கி உள்ளே வைத்திருக்கிறது. ரெய்டை கண்டு பயப்பட நாங்கள் ஒன்றும் பழனிசாமி கிடையாது. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசு. இந்தியாவிலேயே எந்த ஒரு இயக்கத்திலும் இல்லாத வகையில் 1980 – ல் இளைஞரணி இயக்கத்தை உருவாக்கியது தி.மு.க-தான். முதல் இளைஞரணி மாநில மாநாடு நெல்லையில் 2007 – ல் நடந்தது. இரண்டாவது மாநாடு சேலத்தில் வரும் 17 – ல் நடக்கிறது. தேர்தலுக்கு முன் அனைத்து இயக்கமும் எழுச்சியை காட்டுவதற்கு மாநாடு நடத்துவது உண்டு. ஆனால், இரண்டு மாதத்திற்கு முன் மதுரையில் சிலர் மாநாடு நடத்தியதை பார்த்திருப்பீர்கள். ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு நடந்தது. அதில் அந்த இயக்கத்தியன் கொள்கையையோ, இயக்கத்தின் வரலாறு பற்றியோ யாரும் பேசவில்லை. ஆனால், நம் மாநாடு இந்தியாவில் எந்த இயக்கமும் இப்படியொரு எழுச்சியான மாநாட்டை நடத்தவில்லை என்பதை காட்ட வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நடக்கும் மாநாடு என்பதால் நம் எழுச்சியை காட்டியாக வேண்டும். களத்தில் இறங்கி கட்சிக்காக எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவர்தான் உண்மையான செயல்வீரர்.

கரூர் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின்

அப்படியானால் இந்த மாவட்டத்தின் முதன்மையான செயல்வீரர் செந்தில் பாலாஜிதான். இன்றைக்கு சிலரது சூழ்ச்சியாலும், சதியாலும் அவர் இங்கு இல்லாத சூழல். கரூரை தி.மு.க-வின் கோட்டையாக மாற்றிக்காட்டியவர் செந்தில் பாலாஜி. எத்தனையோ சோதனைகளை கடந்து வந்ததுதான் இந்த இயக்கம். எனவே, செந்தில் பாலாஜி மீண்டு வருவார். உங்களை விரைவில் சந்திப்பார். மீண்டும் கட்சிப்பணியை தொடர்வார். கடந்த 1967 – ல் கோபாலபுரத்தில் இளைஞர் அமைப்பை உருவாக்கியவர் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து படிப்படியாக மாநில இளைஞரணி செயலாளர், கட்சி பொருளாளர், துணைமுதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், இப்போது முதல்வர் என உழைப்பால் முன்னேறியவர்தான் நம் முதல்வர். யார் காலையும் பிடித்து முன்னேறவில்லை. அ.தி.மு.க-வின் 10 ஆண்டுகால ஆட்சியில் இழந்த உரிமைகளை மீட்கத்தான் சேலம் மாநாடு நடத்துகிறோம். நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி, இதுவரை 60 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். ஒன்றிய பா.ஜ.க அரசு நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வந்ததால, தமிழகத்தில் 22 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என சட்டமன்றத்தில் சட்டம்போட்டாலும் ஒன்றிய அரசு ரத்து செய்ய மறுக்கிறது. தமிழகத்தில் இருந்து கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு கட்டிய வரி ரூ. 5 லட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு திருப்பிக்கொடுத்தது ரூ.2 லட்சம் கோடி. இதையெல்லாம் மீட்கத்தான் சேலம் மாநாடு நடக்கிறது. நம் ஆட்சியின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா வசதி, அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம் போன்றவை குறித்தும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். ஆனால், இந்த 9 வருடத்தில் பா.ஜ.க அரசு என்ன செய்தது என ஏதாவது சொல்ல முடியுமா?. பிரதமர் மோடி மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் என்னை பற்றி பேசுகிறார். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்றுதான் பேசினேன்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் என் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. தி.மு.க-வில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. இது பெரியாரின் கொள்கை வாரிசுகள், அண்ணா, கருணாநிதியின் கொள்கை வாரிசுகள் நாங்கள். சிஏஜி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க அரசு ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது என தெரியவில்லை, ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி என கணக்கு காட்டியிருக்கிறார்கள். இறந்த போன 88,000 பேருக்கு இன்சூரன்ஸ் கொடுத்துள்ளனர். இதைப்பற்றி கேட்டால் பதில் சொல்ல அங்கு யாரும் தயாராக இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அது கலைஞரின் குடும்பமாகத்தான் இருக்கும் என்கிறார் பிரதமர். ஆமாம் ஒட்டுமொத்த தமிழகமே கலைஞரின் குடும்பம்தான். அதானி கையில் அனைத்து தொழிற்சாலைகளையும் கொடுத்துவிட்டார் பிரதமர். இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டும். இதற்கு முன்னோடியாக சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்ட வேண்டும். ஒரு பூட்டப்பட்ட பூட்டு, ஒரு சாவி, ஒரு சுத்தியல். பூட்டை திறக்க சுத்தியல் எவ்வளவோ முயற்சி செய்தது. பூட்டு தலையில் சுத்தியல் அடித்தும் பூட்டு திறக்கவில்லை.

கரூர் நிகழ்ச்சி

ஆனால், சாவி எளிதாக பூட்டை திறந்துவிட்டது. அப்போது சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது, நான் எவ்வளவோ வலிமையாக இருக்கிறேன், தெம்பாக இருக்கிறேன், ஆனால் என்னால் பூட்டை திறக்க முடியலை, என்றது. அப்போது சாவி சொல்லியது, நீ பூட்டை திறக்க அதன் மண்டையை அடித்தாய், ஆனால் நான் பூட்டின் இதயத்தை திறந்தேன். அதனால்தான் நான் எளிதாக பூட்டை திறக்க முடிந்தது. நான் பூட்டு என்று சொன்னது நம் தமிழ்நாடு, சுத்தியல் என சொன்னது ஒன்றிய பா.ஜ.க அரசு. சாவி என்று சொன்னது தி.மு.க. ஒன்றிய பா.ஜ.க அரசு என்ன சதி செய்தாலும் தமிழகத்தில் நுழைய முடியாது. ஏனென்றால் அந்த சாவி நம்மிடம் இருக்கிறது” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *