`கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவின் போது மாணவிக்கு அவரின் ஆசிரியர் வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டினார்” என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
2-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அவரின் ஆசிரியர் கட்டாயப்படுத்தி முட்டையை ஊட்டிவிட்டதாக பிராமண குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் புதன்கிழமையன்று கல்வித் துறைக்கு புகார் கடிதம் எழுதி இருக்கிறார். பள்ளி ஆசிரியரின் செயல் தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மாணவியின் தந்தை தனது புகாரில், “நாங்கள் கடுமையான சைவ உணவைப் பின்பற்றுவதாக பள்ளி அதிகாரிகளுக்கு முன்பே தெரிவித்து இருந்தோம். இதை அறிந்திருந்தும், பள்ளியில் மதிய உணவு பரிமாறும் போது, ஆசிரியர் என் மகளுக்கு வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டியுள்ளார்.
குழந்தைகளுக்கு முட்டை, புரதச்சத்து, வாழைப்பழம் கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் வழங்கலாம் என்பது குறித்து அனைத்து பெற்றோரையும் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என என் குழந்தை எங்களிடம் கூறினார். கடந்த ஒரு வாரமாக ஓர் ஆசிரியர் அவளை முட்டை சாப்பிட வற்புறுத்தியுள்ளார்.
அவள் மனரீதியாக வற்புறுத்தப்பட்டிருக்கிறாள். இந்த விஷயத்தில் புகார் கொடுத்தால் உன்னை அடித்துவிடுவேன் என ஆசிரியர் மிரட்டி இருக்கிறார். மேலும், உனது சாதியைச் சேர்ந்தவர்கள் முட்டை சாப்பிட்டால் எதுவும் நடக்காது என்றும் திட்டியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
