ஆஸ்பத்திரிக்குப் போவதாக அம்மாவுக்கு வாய்ஸ் மெசேஜ்…

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட புல்லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். இவரின் ஒரே மகள் ரோஹிணி (27). ஐதராபாத், கேரளாவைச் சேர்ந்த கூட்டு ஏஜென்ஸி மூலம் ரோஹிணியை மருத்துவம் படிக்க சீனாவுக்கு அனுப்பிவைத்தார் கோபாலகிருஷ்ணன். ஐந்து ஆண்டுகள் மருத்துவம் படித்து முடித்து ஊருக்கு வருவதுவரை அனைத்துப் பொறுப்புகளையும் அந்த ஏஜென்ஸியே ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 12-ம் தேதி மாணவி ரோஹிணி ஐந்தாண்டுகள் மருத்துவப் படிப்பு முடித்து, ஜனவரி 13-ம் தேதி ஊர் திரும்புவதாகக் கூறியிருந்தார். ஆனால், மாணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். உணவு சாப்பிட முடியாத நிலையில் ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைந்ததாகவும், ட்ரிப் போட்ட சமயத்தில மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வலிப்பு மற்றும் வேகமான இதயத்துடிப்பு காரணமாக கடந்த 13-ம் தேதி மாணவி ரோஹிணி இறந்துபோனார். காய்ச்சல் ஏற்பட்டிருப்பது குறித்து ரோஹிணி தன்னுடைய பெற்றோருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்திருக்கிறார். காய்ச்சல் சரியானதும் வீடு திரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தது குறித்து, சக மாணவிகள் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

மரணம்

இறந்த ரோஹிணியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர பெற்றோர் முயன்றிருக்கின்றனர். ஆனால், ரோஹிணியை ஊருக்குக் கொண்டுவர 21 லட்சம் ரூபாய் செலவாகும் என சீனா மருத்துப் பல்காலைகழக நிர்வாகம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என ரோஹிணியின் குடும்பத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

இது குறித்து ரோஹிணியின் மாமா கோபகுமார் பேசுகையில், “ரோஹிணிக்குப் பல நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு, அவர் சில மாத்திரைகளைச் சாப்பிட்டிருக்கிறார். காய்ச்சல் சரியான நிலையில் சில நாள்களுக்குப் பிறகு, அவருக்கு மூன்று நாள்களாகப் பசியில்லாமல் இருந்திருக்கிறது. சாப்பிடாமல் இருந்த ரோஹிணிக்கு, சக மாணவிகள் ஜூஸ் கொடுத்திருக்கின்றனர். ஜூஸ் குடித்த பின்னர் ரோஹிணி வாந்தி எடுத்திருக்கிறார். கடந்த 12-ம் தேதி ஆஸ்பத்திரிக்குப் போன உடனே அவருக்கு ஃபுட் பாய்சனுக்கான சிகிச்சை அளித்திருக்கின்றனர். ட்ரிப் போடுவதற்கு ஹாஸ்டலிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதாக ரோஹிணி தன்னுடைய அம்மாவுக்கு கடைசியாக வாய்ஸ் மெசேஜ் போட்டிருந்தார். சிகிச்சைக்கு இடையே இதய செயல்பாடு நின்றதால், 13-ம் தேதி இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் எல்லாம் முடிந்துவிட்டது.

சீனாவில் மரணமடைந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரோஹிணி

ரோஹிணி ப்ளஸ் டு முடித்துவிட்டு, மயக்கவியலில் டிப்ளமோ இரண்டு ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு, 2016-ம் ஆண்டு சீனாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்றார். ஐந்து ஆண்டுகள் மருத்துவம் படித்து முடித்த நிலையில், ஓராண்டு மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். படிப்பும், பயிற்சியும் முடிந்து ஜனவரி 12-ம் தேதி ஊருக்கு வருவதாக டிக்கெட் போட்டிருக்கிறார். வீட்டுக்கு ஒரே பிள்ளையான ரோஹிணி, படிப்பதில் கெட்டியாக இருந்தார். தேர்வுகள் முடிந்து பயிற்சி மருத்துவராக இருந்துவந்தார். அவரின் உடலைக் கொண்டுவர 21 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, பல்கலைக்கழகம் தெரிவித்ததாக சக மாணவர்கள் கூறியிருந்தனர். இன்றுதான் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ரோஹிணி மரணம் குறித்து அதிகாரபூர்வமாகத் தகவல் தந்திருக்கின்றனர். சிகிச்சையிலிருந்த சமயத்தில் தூதரகத்துக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்திருக்கின்றனர். சீனா மற்றும் இந்திய தூதரகங்கள் பேசி உடலைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுத்துவருவதாகச் சொல்லியிருக்கின்றனர். உடலை விரைந்து கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *