“ஆரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்” என தி.மு.க-வுக்கு ஆதரவான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் கமலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயலை தி.மு.க அரசு முறையாக கையாளவில்லை எனக் கடுமையாக விமர்சித்துவருகிறது அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள். மீட்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என சென்னை மக்களும் தி.மு.க மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன.

நம்மிடம் விவரமறிந்தவர்கள் பேசுகையில், “தி.மு.க அரசு புயலை கையாண்டவிதம் திருப்திகரமானதாக உள்ளதென கூட்டணி கட்சியினரே முழுமனதுடன் சர்டிபிக்கேட் தராத நிலையில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மட்டும் “அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்” என ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய போதும், “இதற்கு முன் நிகழ்ந்ததெல்லாம் சிற்றிடர். ஆனால் இது பேரிடர். குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் கடமை என்றிருக்கிறார்” கமல்.

கமலின் இந்த கருத்தை தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்து தேர்தலை சந்திக்க இருப்பதால் தி.மு.க-வை விமர்சிக்க மனமில்லாமல் இப்படி பேசியிருக்கிறார் என்றும் அடிதட்டு மக்களின் நிலையை கமல் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது” என்றனர்.
ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனின் நிலைபாடு குறித்து கருத்துதெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நடிகர் கமல்ஹாசனை நாங்கள் ஒரு அரசியல் தலைவராகவே பார்க்கவில்லை. தி.மு.க தயவில் எம்.பியாக முயற்சிக்கிறார் அவர். பச்சோந்தியைவிட விரைவாக நிறம் மாறுபவர் கமல்ஹாசன். அவர் கட்சியில் அவர்மட்டுமே இருக்கிறார். அவர் கருத்துக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டியதில்லை” எனச் சாடினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நா.த.க-யின் சுற்றுசூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன், “மழைநீரானது ஓடை, கால்வாய் வழியாக ஆறுகளுக்கு சென்று அங்கிருந்து மூன்று ஆறுகளின் முகத்துவாரம் வாயிலாக கடலுக்கு செல்கிறது.
இந்த நீர்வழிப்பாதைகளை பராமரிக்காமல், பல்லாயிரம் ஏக்கர் இடங்களை ஆக்கிரமிக்க வழிவகை செய்திருக்கிறது. திராவிட கட்சிகளின் ஆட்சி. இருக்கட்சிகளுமே நீர் மேலாண்மையில் டோட்டர் பெயிலர் என்றாலும் மிகையல்ல. இதோடு மிக்ஜாம் புயலின் தீவிரத்தன்மையை மக்களுக்கு உணர்த்தாமலும், தாழ்வான பகுதியில் வாழும் மக்களை தத்தளித்தபோதுகூட அப்புறப்படுத்தாமலும், அடிப்படை தேவைகளான பால் போன்ற பொருட்களைகூட தயாராக வைத்திடாமல் தோல்வியடைந்த தி.மு.க அரசுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் பேசியிருப்பது அப்பட்டமான அரசியல் ஆதாயம்” என்றார்.
இதுகுறித்து ம.நீ.ம செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் விளக்கம் கேட்டோம்… “கூளைகும்பிடு போட்டு பதவிபெற்ற எடப்பாடிக்கு கமல்ஹாசன் குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது. ஒருசிலரால் அடையாளங்காட்டப்பட்டு பதவி வகிக்கும் எடப்பாடியின் கருத்துக்கு பதிலளிப்பதை தகுதி குறைவாக பார்க்கிறோம். மழை தொடங்குவதற்கு முன்னரே தலைமறைவான பழனிசாமி, பதுங்கு குழியிலிருந்து இப்போது தான் வெளியே வந்திருக்கிறார். கஜா புயலை அ.தி.மு.க அரசு எதிர்கொண்டபோதுகூட அரசின் பணிகளை பாரட்டியது மய்யம். இப்போதும் நிதர்சனத்தை பேசுகிறோமெ தவிர ஆதாயம் தேடிதான் எம்.பியாக வேண்டிய அவசியம் கமலுக்கு இல்லை. ஜெயலலிதாவையே எதிர்த்து களமாடியவரை அரசியல்வாதியாக பார்க்கவில்லை என்றால் எடப்பாடிக்கு அரசியலே தெரியவில்லை என்றே பொருள். ” என்றார் காட்டமாக.

கட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் தி.மு.க-வை `ஊழல் கட்சி, அழுக்கு பொதிமூட்டை` என விமர்சித்த கமல்ஹாசன் இப்போது அரசின் நிர்வாக தவறுகளைகூட சுட்டிக்காட்ட மறுப்பது ஏன் எனும் கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
