தொடர்ந்து, “அப்படி பெரும்போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததன் அடையாளமாக 4,500 ஆண்டு காலப் பழமையான ஜல்லிக்கட்டுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடக்கும் அலங்காநல்லூர் பகுதியிலேயே மிகப்பெரிய ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டமைத்திருக்கிறார். இந்த மைதானம் ஜல்லிக்கட்டுக்கானது மட்டுமல்ல… தமிழர்களின் பாரம்பர்ய கலைகள், பண்பாட்டு கலாசார விழாக்கள், கால்நடை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என அனைத்தும் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஆண்டு முழுவதும் 365 நாட்களும் இயங்கும். வெளிநாட்டிலிருந்து வரக்கூடியவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்கள் சுற்றுலாப்பயணிகள் என அனைவரும் பார்வையிட்டு செல்லும்படி மிக அற்புதமான மியூசியம்கூட அமைக்கப்பட்டிருக்கிறது. எங்களின் அயலக தமிழர் நல வாரியத்தின் `வேர்களைத் தேடி’ திட்டத்தின்மூலம், தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளை 15 நாட்கள் சுற்றுப்பயணமான தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம், மியூசியம் போன்றவற்றை காண்பிப்போம். இப்படியாக தமிழர்களின் பாரம்பர்யத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இந்த ஜல்லிக்கட்டு மைதான அரங்கம்.
இந்த விவரங்களெல்லாம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தெரியவில்லை என்றால், அவரை நானே நேரில் அழைத்துச்சென்று அனைத்தையும் காண்பிக்கிறேன். அவர் விருப்பப்பட்டால் திறப்பு விழா நடக்கும்போது அவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து முறைப்படி வரவேற்கிறோம். அவரே நிகழ்வில் கலந்துகொண்டு எவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறோம் என்பதை பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்!” என அழைப்பு விடுத்தார்.

மேலும், தி.மு.க தேர்தல் வாக்குறுதியளித்த ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படாதது குறித்து கேட்டபோது, “தமிழ்நாட்டின் நிதி நிலைமை என்ன நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நியாயமாக தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய நிதிகளை ஒதுக்காமல் எப்படி தமிழ்நாட்டின் வருமானத்தை மத்திய அரசு சுரண்டி கொண்டிருக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். அந்த நிலையிலும்கூட மிக முக்கியமான மகளிர்க்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, வெள்ள நிவாரண நிதி, பொங்கல் பணம் என அனைத்தும் தடையில்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல `சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்’ என்றபடி நிச்சயமாக நிதிநிலை சீரானதும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கான நிதி உதவி வழங்கப்படும். அதேசமயம், எங்களை இவ்வளவு குறை சொல்லும் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான் The Tamil Nadu Bovine Breeding Act, 2019 – சட்டத்தைக் கொண்டு வந்து, காளைகளை வைத்துக் கொள்வதே சட்டப்படி குற்றம்; அப்படி காளைகளை வைத்துக்கொண்டால் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்; இரண்டு லட்சம் ரூபாய் கால்நடை துறைக்கு பணம் கட்ட வேண்டும் என்றெல்லாம சொன்னார்கள். அன்றைக்கும் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல்கொடுத்தது தங்கம் தென்னரசு போன்ற தி.மு.க தலைவர்கள்தான். அன்று கொடிய சட்டங்களைக் கொண்டுவந்து கால்நடைகளை அழிக்கப் பார்த்தவர்கள்தான் இன்று கால்நடை பற்றி அக்கறை பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என விமர்சித்தார்.
விவரம் அறிந்த சிலரிடம் கேட்டபோது, “மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் வழக்கமாக நடைபெறு பாரம்பர்யமிக்க ஜல்லிக்கட்டுகள் முடிந்த பின்னர், இந்த மைதானத்திலும் ஒரு போட்டி நடத்தப்படலாம். அதில் அனைத்து ஊர்களில் இருந்து வீரர்கள் மாடுகள் பதிவு செய்து கலந்து கொள்ளும் விதம் ஏற்பாடுகள் செய்யப்படும். மற்ற நேரங்களில் இந்த மைதானம் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு ஒரு அடையாளமாக, மியூசியமாக செயல்படும்” என்கிறார்கள். ஜல்லிக்கட்டு மைதானம் தொடர்பான சில குழப்பங்கள் மக்களுக்கு இருப்பதால் அரசே அதனை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
