சொத்துகளை முடக்கும் அதிகாரத்தையும் இந்த புதிய சட்டங்கள் காவல்துறைக்கு வழங்குகின்றன. கிட்டத்தட்ட அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட வானளாவிய அதிகாரத்தை இந்தப் புதிய சட்டங்கள் காவல்துறைக்கு வழங்குகிறது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கை விலங்கு பயன்படுத்துவது மனித உரிமை மீறல் என்று 1980 முதலே உச்ச நீதிமன்றம் சொல்லிவருகிறது. ஆனால், இந்தப் புதிய சட்டத்தின்படி கை விலங்கு பயன்படுத்தலாம்.
சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (The unlawful activities (Prevention) Act, 1967) உள்ளிட்ட சட்டங்கள் ஏற்கனவே உள்ளன. இந்நிலையில், புதிய சட்டங்களின்படி, அரசுக்கு கோரிக்கை வைக்கும் சிறு ஆர்ப்பாட்டங்கள் கூட பயங்கரவாதச் செயலாக அடையாளப்படுத்தப்படலாம்.
சட்டப்பிரிவு 116(6)(a), காவல் துறையின் கரங்களில் கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களை எந்த வன்முறையைப் பிரயோகித்தும் கைது செய்யலாம். இதன் மூலம் என்கவுன்டர்கள் நியாயப்படுத்தப்படுவதற்கான, சகஜமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் மட்டுமே இந்த புதிய சட்டங்கள் அமலுக்கு வந்து விடாது. மத்திய அரசு அரசிதழில் NOTIFY செய்யவும், CRPC க்கு புதிய விதிமுறைகளை வகுக்கவும், சற்று காலம் பிடிக்கும். இந்த புதிய சட்டங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள், நீதித்துறையினர், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கல் என அனைத்து பிரிவினரிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, அனுதினமும் மக்களை பாதிக்கப் போகின்ற இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு மனம் திறந்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்திய பிறகு தான், அடுத்த கட்ட முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார் விரிவாக.
காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள் முடிவடைய உள்ள நிலையில், மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்படுகிறோம். புதிய இந்தியத் தண்டனைச் சட்டம் மிகவும் கொடூரமானது. ஏழை, உழைக்கும் வர்க்கம், நலிந்த பிரிவினருக்கு எதிராக இந்தச் சட்டம் அடக்குமுறைக் கருவியாக மாறும். பெரும்பாலான கைதிகள் (விசாரணையின் கீழ் உள்ளவர்கள் உட்பட) ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் அரசியலமைப்பின் 19 மற்றும் 21 வது பிரிவுகளை மீறும் பல விதிகள் இருக்கின்றன. புதிய தண்டனைச் சட்டம் மற்றும் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பாதிப்பை ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் சுமக்க நேரிடும். புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் ‘சட்டத்தின் சரியான செயல்முறையை’ வலுப்படுத்துவதற்குப் பதிலாக, ‘சுதந்திரம்’ (freedom) மற்றும் ‘தனிப்பட்ட சுதந்திரம்’ (personal liberty) ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் இருக்கிறது.
ஒரு கைதிக்கு 60 முதல் 90 நாட்கள் வரை காவல்துறை காவலை நீட்டிக்க முடியும் என்ற புதிய விதி, காவல்துறையின் அத்துமீறலுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே, 2024-ம் ஆண்டில் அடுத்து வரும் அரசின் முதல் பணிகளில் ஒன்றாக, இந்த சட்டங்களை மறு ஆய்வு செய்து, கடுமையான விதிகளை அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
