மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதம் கட்டாயமாக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு’ மசோதாவை, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்டதுமுதல், காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேசமயம், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் அடிப்படையிலான தொகுதி வரையறையின் பேரில் 2029-ல் தான் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுவதால், மசோதாவை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. முக்கியமாக, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களும் இந்த இட ஒதுக்கீட்டில் இடம்பெறவேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும், உடனடியாக இதனை அமல்படுத்தவேண்டும் என்றும் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார்.
இன்று மக்களவையில் மசோதா குறித்து உரையாற்றிய சோனியா காந்தி, “இது என் வாழ்வின் ஓர் உணர்ச்சிகரமான தருணம். முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை என் கணவர் ராஜீவ் காந்தி கொண்டுவந்தார். அது மாநிலங்களவையில் ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
பின்னர், பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. இதன் விளைவாக, உள்ளாட்சி அமைப்புகள் மூலம், நாடு முழுவதும் 15 லட்சம் பெண் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இதில், ராஜீவ் காந்தியின் கனவு, ஓரளவு மட்டுமே நிறைவேறியது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவான `நாரி சக்தி வந்தன் ஆதினியம் 2023-க்கு’ நான் ஆதரவாக நிற்கிறேன். இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு பெண்கள் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்தியப் பெண்கள் கடந்த 13 ஆண்டுகளாக அரசியல் பொறுப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இப்போது இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது இன்னும் எத்தனை ஆண்டுகள்… இந்திய பெண்களிடம் இவ்வாறு செயல்படுவது சரியா… எனவே, இந்த மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது. அதோடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் மற்றும் இந்த மசோதாவில் பட்டியல் (SC), பழங்குடி (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (OBC) பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com