அதன்பின் அவர்பட்ட அவமானங்கள் அதிகம். மேற்குக் கரையில் இருக்கும் ரமல்லா நகர் அவருக்கு தலைநகரம். அங்கே அதிபர் மாளிகை இருக்கிறது. அதை இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் சூழ்ந்துகொண்டு நொறுக்கின. சில அறைகள் மட்டுமே மிஞ்சின. மின்சாரம் கிடையாது. ‘எங்காவது வெளிநாட்டுக்கு போய்விடுங்கள். உயிர்ப்பிச்சை தருகிறோம். ஆனால் திரும்ப இங்கே வரக்கூடாது’ என்றது இஸ்ரேல். ஆனால் முற்றுகைக்கு நடுவே தனது மக்களோடு சேர்ந்து வாழ்ந்தார் அவர். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வேலைபார்த்தார். தண்ணீர் கிடையாது… அவசரத் தேவைக்கு மருந்துகள் கிடையாது. நல்ல சாப்பாடு கிடையாது. எந்த நேரத்தில் எங்கிருந்து குண்டுவிழுந்து மடிந்து போவோமோ என்ற பயத்தோடு நகரும் வாழ்க்கை!

தான் மறைந்தபிறகு ஜெருசலேம் நகரில் இருக்கும் அல்-அக்ஸா மசூதி அருகே புதைக்கப்பட வேண்டும் என்று அராபத் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இஸ்ரேல் அதற்கு சம்மதிக்கவில்லை. ஜெருசலேம் நகர்மீது பாலஸ்தீனர்கள் உரிமை கொண்டாடுவதை இது வலுவாக்கிவிடும் என்று அஞ்சியது. கடைசியில் ரமல்லா நகரில் அவர் புதைக்கப்பட்டார். ‘சுதந்திர பாலஸ்தீனம் அமைந்ததும், அவர் மீண்டும் ஜெருசலேமில் புதைக்கப்படுவார்’ என்று பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது.
சுயாட்சி அரசு அமைந்தபிறகு அராபத் ஊழல் செய்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டி அவர் இமேஜைக் குலைக்க முயன்றது. ‘முழு விடுதலை என்ற இலக்கைக் கைவிட்டு இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொண்டு பாலஸ்தீன மக்களுக்குத் துரோகம் செய்தார்’ என்று போட்டி அமைப்புகள் குற்றம் சாட்டின. என்றாலும், பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் யாசர் அராபத்தின் பங்கை யாராலும் நிராகரிக்க முடியாது.
சரி, இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் இஸ்ரேல் எப்படி ஜீவித்திருக்கிறது?
(நாளை பார்க்கலாம்…)
நன்றி
Publisher: www.vikatan.com
