அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதி உருவாக்கப்பட்டபோதே, அங்கு தேர்தல்கள் மூலம் அரசு அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இஸ்ரேலின் அதிகாரத்துக்கு உட்பட்ட சுயாட்சிப் பகுதி என்றாலும், பாலஸ்தீனத்துக்கு ஓர் அதிபர் உண்டு, சட்டமன்றம் உண்டு. ஆரம்ப காலங்களில் நடைபெற்ற அதிபர் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணித்த ஹமாஸ், யாசர் அராபத் மரணத்துக்குப் பிறகு நடைபெற்ற 2006 சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுத்தது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. ஹமாஸை போட்டியிட அனுமதிக்கலாமா என்று நீண்ட விவாதம் நடத்தி, பிறகு அனுமதி கொடுத்தார்கள். காஸாவில் இருந்த யூதக் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அங்கு வசித்தவர்களை இஸ்ரேல் நிலப்பரப்புக்கு அப்போதுதான் அழைத்திருந்தது இஸ்ரேல் அரசு. அதைத் தங்கள் ஆயுதப் போராட்டங்களின் வெற்றியாக ஹமாஸ் சொல்லிக்கொண்டது. ‘காஸா விடுவிக்கப்பட்டது போல ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் இஸ்ரேல் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்து தேர்தலில் நின்றது. அதேசமயத்தில், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அது சொல்லவே இல்லை.


நன்றி
Publisher: www.vikatan.com