பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, ஒரு வாரத்துக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த மோதலில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 1,300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 2,200-க்கும் மேற்பட்ட காஸா மக்களும் உயிரிழந்திருக்கின்றனர்.

இன்னமும் காஸாவில் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 199 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறது என்று குற்றம்சாட்டும் இஸ்ரேல், `போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை’ என்று கூறிவருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலின் விமானப்படை, ஹமாஸின் வான்வழி தாக்குதல் நடவடிக்கையின் தலைவர் மெராட் அபு மெராட்டை (Merad Abu Merad) கொன்றதாகத் தெரிவித்த, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர், லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட் (Richard Hecht), “யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) மற்றும் அவரின் குழு எங்கள் பார்வையில் இருக்கிறது. அவரை நெருங்குவோம்” என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், “யாஹ்யா சின்வார் தீமையின் முகம். இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின்லேடன்போல, இந்த தாக்குதலுக்கு யாஹ்யா சின்வார் மூளையாகச் செயல்படுகிறார்” என்றும் ரிச்சர்ட் ஹெக்ட் கூறியிருந்தார். மேலும், ரிச்சர்ட் ஹெக்டை, “கான் யூனிஸின் (Khan Younis) கசாப்புக் கடைக்காரர்” என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறிவருகிறது. இஸ்ரேலால் இவ்வளவு கொடூரமாக வர்ணிக்கப்படும், குறிவைக்கப்படும் இந்த யாஹ்யா சின்வார் யார்…
யாஹ்யா சின்வார்
எகிப்தின் கட்டுப்பாட்டிலிருந்த தெற்கு காஸாவிலுள்ள கான் யூனிஸில் 1962-ல் பிறந்தார் யாஹ்யா சின்வார். காஸாவிலுள்ள இஸ்லாமிய அரபு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவராவார். 1982-ல் முதன்முதலாக, நாசகார நடவடிக்கைகளுக்காகக் கைதுசெய்யப்பட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் பாலஸ்தீனிய இயக்கத்துக்குள், இஸ்ரேலின் உளவாளிகளைக் குறிவைக்கும் ஒரு பிரிவை உருவாக்க சலா ஷெஹாடேவுடன் (Salah Shehade) இணைந்தார். பின்னர், 1987-ல் ஹமாஸ் நிறுவப்பட்ட பிறகு, சலா ஷெஹாடேவுடன் யாஹ்யா சின்வார் இணைந்து உருவாக்கிய பிரிவு, ஹமாஸின் ஒருங்கிணைந்த ஆயுதப் பிரிவாக மாறியது.

அதைத் தொடர்ந்து, 1988-ல் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொலைசெய்ததற்காக யாஹ்யா சின்வார் கைதுசெய்யப்பட்டார். அடுத்த ஆண்டே, அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. இன்னொருபக்கம், ஹமாஸின் ராணுவப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய சலா ஷெஹாட், 2002-ல் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிறகு, யாஹ்யா சின்வார் சிறையிலிருந்த சமயத்தில், 2006-ல், ஹமாஸின் ராணுவப் பிரிவான Izz ad-Din al-Qassam Brigades-ன் குழு ஒன்று, சுரங்கப்பாதை மூலம் இஸ்ரேலின் எல்லையைக் கடந்து அதன் ராணுவச் சாவடியைத் தாக்கியது.
இந்த தாக்குதலில், இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்தனர். அதோடு, கிலாட் ஷாலித் (Gilad Shalit) என்ற இஸ்ரேல் வீரரைப் பிடித்து வைத்தது ஹமாஸின் குழு. சுமார் ஐந்து ஆண்டுகள் ஹமாஸின் சிறைப்பிடியிலேயே இருந்தார் கிலாட் ஷாலித். பின்னர் 2011-ல், கிலாட் ஷாலித்தின் விடுதலைக்காக ஹமாஸிடம் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு உடன்பட்டது இஸ்ரேல். அதன்படி, 1,027 பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய அரபு கைதிகளை விடுவித்தது இஸ்ரேல். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் யாஹ்யா சின்வாரும் ஒருவராவார். இதில், கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் இஸ்ரேலில் சிறைவாசம் அனுபவித்தார்.

வெளியான சில ஆண்டுகளிலேயே, ஹமாஸின் ராணுவப் பிரிவில் உயர் பதவிக்குச் சென்றார். மொத்தமாக, யாஹ்யா சின்வார் தனது வாழ்நாளில் 24 ஆண்டுகள் சிறையிலிருந்ததாகக் கூறப்படுகிறது. 2015-ல் அமெரிக்காவின் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலிலும் இடம்பெற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2017), காஸாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதுவரை ஹமாஸ் குழுவின் தலைவராக நீடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்கு (Ismail Haniyeh) அடுத்த இடத்திலும் இவரே இருக்கிறார். இந்த நிலையில்தான், கடந்த அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com