கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதன் பின்னணி முக்கியமானது. ‘காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை கர்நாடகா செயல்படுத்தவில்லை. எனவே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில், ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டி.எம்.சி நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளது. எனவே, கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் நிரம்பவில்லை. ஆனாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை அமைப்பதாக உறுதியளித்தார். இந்தச் சூழலில்தான், அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடகா அரசு நடத்தியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
